நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு நட்சத்திரத்தில் பிறந்திருப்போம். அவ்வாறு, நாம் பிறக்கும் நட்சத்திரம் நமக்கு "ஜென்ம நட்சத்திரம்" என்று அழைக்கப்படுகிறது. இது நாம் அனுபவிக்க கூடிய நல்வினை தீவினைகளை சுட்டிக்காட்ட பயன்படுகிறது. நீங்கள் பிறந்திருக்கும் நட்சத்திரத்தின் அடிப்படையில் அனுபவிக்க இருக்கும் நல்வினை தீவினைகள் பற்றி இப்பதிவில் நம் காணலாம்.
ஒவ்வொரு நட்சத்திரத்திற்க்கும் அதற்கு அதிபதிகள் உண்டு. அந்த அதிபதி கால புருஷ தத்துவத்தின் படி எந்த பாவத்தில் நீசமடைகிறாரோ அது சார்ந்த பாவக காரக பிரச்சனைகள் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனுபவிக்க நேரிடும்.
உதாரணமாக, அஸ்வினி நட்சத்திரம் என்றால் அதன் அதிபதி கேது. அது நீசம் அடையும் இடம் சிம்மம். இது கால புருஷ தத்துவத்தின்படி ஐந்தாம் இடம். ஆகவே, அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு; ஏதோ ஒரு வகையில் ஐந்தாம் இடம் சார்ந்த பிரச்சினைகள் அமையும். இதில், ஐந்தாம் இடம் என்பது குழந்தைகள், தாத்தா, பூர்வீகம் மற்றும் பிற காரகங்களும் அடங்கும். இவை சார்ந்தப் பிரச்சனைகளை அனுபவிக்க நேரிடும்.
இதில் நீசம் என்பது எந்த ஒரு வகையிலும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். பொதுவாக, நீசம் என்பது குறைவு அல்லது தாழ்வானது என்று பொருள்படும். அவ்வாறு, தாங்கள் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் அதன் ஆதிபத்திய கிரகம் கண்டிப்பாக ஏதோ ஒரு ராசி கட்டத்தில் நீசம் அடையும். அது சுட்டிக்காட்டுவது அந்த நட்சத்திர அதிபதியின் தன்மையை அந்த ராசி கட்டத்தில் வாயிலாக குறைவாக இருக்கும் என விவரிக்கிறது. இது அந்த சாதகருக்கு ஒரு சில பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இவ்வாறாக, மற்ற நட்சத்திரங்களுக்கு பார்க்கலாம்.
அது போல, பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஆறாம் இடம் சார்ந்த பிரச்சினைகள் அமையும். அதாவது ஆறாம் இடம் என்பது தாய் மாமன், உத்தியோகம், கடன், நோய், எதிரிகள் மற்றும் இன்னும் பல காரகங்கள் அடங்கும். இவை சார்ந்த பிரச்சினைகளை அனுபவிக்க நேரிடும்.
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஏழாம் இடம் சார்ந்த பிரச்சினை அமையும். இதில் ஏழாம் இடம் என்பது கணவன் அல்லது மனைவி உறவு முறை, இரண்டாவது குழந்தை, பொது மக்கள், சங்கம், குழுக்கள், மக்கள் தொடர்பு, பங்குதாரர்கள் மற்றும் இன்னும் பல காரகங்களை உள்ளடக்கியது ஆகும். இவை சார்ந்த பிரச்சனைகள் அனுபவிக்க நேரிடும்.
ரோகினி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு எட்டாம் இடம் சார்ந்த பிரச்சினை அமையும். இங்கே எட்டாம் இடம் என்பது ஆயுள், ரகசியங்கள், பாதுகாப்பு மற்றும் இன்னும் பல காரகங்களை உள்ளடக்கியதாகும். இவை சார்ந்த பிரச்சினைகள் அனுபவிக்க நேரிடும்.
மிருகசீரிடம் சித்திரை, அவிட்டம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு நான்காமிடம் சார்ந்த பிரச்சினை அமையும். நான்காம் இடம் என்பது வீடு, வாகனம், சுகம், தாயார் மற்றும் பல காரகங்களை உடையது. இவை சார்ந்த பிரச்சினைகளை அனுபவிக்க நேரிடும்.
திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பதினொன்றாம் இடம் சார்ந்த பிரச்சினை அமையும். இங்கு பதினொன்றாம் இடம் என்பது ஆசை, அபிலாசைகள், லாபங்கள், மூத்த சகோதரர்கள், தந்தை வழி சித்தப்பா மற்றும் பல காரகங்களை கொண்டுள்ளது. இவை சார்ந்த பிரச்சனைகளை அனுபவிக்க நேரிடும்.
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பத்தாம் இடம் சார்ந்த பிரச்சனை அமையும். இங்கு பத்தாம் இடம் என்பது அன்றாட செயல்கள், உயர்வான நிலை, தொழில்கள், மாமியார் மற்றும் பல காரகங்களை கொண்டுள்ளது. இவை சார்ந்த பிரச்சனைகளை அனுபவிக்க நேரிடும்.
பூசம், அனுசம், உத்திரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு தன்னுடைய பிரச்சனைக்கு தானே காரணம் ஆவான். ஏனென்றால், இதன் கிரகம் ஆதிபத்தியம் சனீஸ்வரன் ஆகும். இவர் நீசமாகும் இடம் மேசமாகும். மேசமானது கால புருஷ தத்துவப்படி முதல் வீடாகும். அதுவே, ஜாதகரை குறிக்கும் பாவமாகும். அதன்படி தன்னுடைய பிரச்சனைக்கு தாங்களே காரணமாக அமைவார்கள்.
ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பன்னிரண்டாம் இடம் சார்ந்த பிரச்சினைகள் அமையும். இங்கு பனிரெண்டாம் இடம் என்பது தூக்கம், கால்களின் பாதங்கள், செலவுகள், விரயங்கள் மற்றும் பல காரகங்களை கொண்டுள்ளது. இவை சார்ந்த பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக