இந்த வலைதளத்தில் தமிழர்களின் வாழ்க்கை முறைகள், பண்புகள், தெய்விகம், ஜோதிடம் ஆகியவற்றைப் பற்றிய பல்வேறு வகையான பயனுள்ள தகவல்களை அறியலாம் - இணையம் சார்ந்த எளிமையான கருவிகளை பயன்படுத்த அறத்திணை -யை பின்பற்றுக. For more follow ARATHINAI (arathinai.blogspot.com).

ஆன்மிகம் என்னும் அற்புதம்

ஆன்மிகம் என்னும் அற்புதம்
At ஜூலை 31, 2023
ஆன்மிகம் என்றாலே நினைவிற்கு வருவது இந்து மதமும் இந்தியா எனும் நம் நாடும் தான். ஆம் இந்தியாவை ஆண்ட பெரும்பாலான அரசர்கள், மன்னர்கள் மிகப் பெரும் சாம்ராஜ்யங்கள் மற்றும் குறுநில மன்னர் ஆகியோர்கள், கோயில்கள் மூலம் ஆன்மிகத்தை வளர்த்தார்கள் என்று நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், அவ்வாறு ஆன்மிகத்தை வளர்க்கும் போது அப்பகுதி மக்களுக்கு பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை சேர்த்து வளர்த்தது என்று நாம் அறிந்திருக்க மாட்டோம். அதுவும் மிகப்பெரும் பொருளாதார கொள்கைகளைக் கொண்டுள்ளது; என்பதை நாம் அறிந்திருக்க மாட்டோம். அப்படி என்ன உலகம் அறிந்திராத ஓர் பொருளாதார கொள்கை என்பதை பற்றி தான் இந்த பதிவில் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம். 

எந்த ஒரு அறிவியல் வளர்ச்சியும் எட்டாத அந்த காலகட்டங்களில்; தங்களுக்கு தெரிந்த பட்டறிவை கொண்டு தங்களுக்கான வாழ்வாதாரத்தையும் பொருளாதார முன்னேற்றத்தையும் வளர்த்ததோடு, அடைந்ததோடு மட்டுமல்லாமல்; அதில் மனதிற்கு அமைதியும் நிம்மதியையும் அளிக்கும் ஓர் வாழ்க்கை முறையை ஆன்மிகத்தின் வாயிலாக நம் முன்னோர்கள் மற்றும் நம் மூவேந்தர்கள் விட்டு சென்று இருக்கின்றனர். அதுதான் நம் ஆன்மிகம் மற்றும் பண்பாடு கலாச்சார வழிபாட்டு முறைகள் ஆகும்.

ஏன் நம் முன்னோர்கள் கோயில்களை கட்டினார்கள்?, ஏன் மருத்துவமனைகள் கட்டவில்லை?, ஏன் பாடசாலைகள் கட்டவில்லை?, ஏன் தொழிற்சாலைகள் கட்டவில்லை?. ஆனால், பிரதானமாக தங்களுக்காக மற்றும் தங்களுடைய வருங்கால சந்ததியர்களுக்காக கோயில்களை கட்டி சென்றனர். 

அவ்வாறு, கோயில்கள் எப்பொழுதெல்லாம் கட்டப்பட்டன?

அரசன் தன் மக்களுக்கு பிரித்து கொடுக்காமல், அரசின் நிலங்களை, ஏன் கோயில்களுக்கு மானியமாக கொடுத்தார்கள்? 

எந்த ஒரு நவீன கால அரசாங்கமும் தங்களுக்கான தன்னிறைவான ஆட்சியை மக்களுக்கு அளிப்பதற்கு; ஆகக்கூடிய செலவினங்கள் மற்றும் மக்களுக்கு செய்ய வேண்டிய நலத்திட்டங்களுக்காக கூடிய செலவினங்கள் போன்றவற்றிற்காக நிதிநிலை அறிக்கைகளை தயார் செய்வார்கள். இதைத்தான் நம் முன்னோர்கள் கட்டிய கோயில்களும் செய்தன.

அப்படி மன்னன் ஒரு கோயிலை கட்ட ஆரம்பிக்கும் பொழுது அந்த கோயில் கட்டுவதற்கு தேவையான கட்டுமான பொருட்கள் மற்றும் கோயில் கட்டுமானத்திற்கு தேவையான வேலையாட்கள், கட்டுமான கலைஞர்கள், சிற்ப கலைஞர்கள், தச்சர்கள், இந்த கட்டுமான பொருட்களைக் கொண்டு செல்வதற்கு தேவையான போக்குவரத்து என பலதரப்பட்ட மக்களைக் கொண்டு கோயிலை கட்டினார்கள். பிறகு, கோயில் சுத்தம் செய்வதற்கு வேலை ஆட்கள், வர்ணம் பூசுதல், ஓவியர்கள் மற்றும் இசை நடன நிகழ்ச்சிகளை நடத்த கலைஞர்கள், கோயில்களில் நித்திய வழிபாடுகள் செய்வதற்கு பூசாரிகள், கோயிலில் அன்னதானம் போன்றவற்றை வழங்குவதற்கு சமையல் கலைஞர்கள் என இன்னும் பலதரப்பட்ட துறைகள் சேர்ந்து இயங்கியது தான் நம் இந்துக் கோயில்கள். இது அப்பகுதியில் இருக்கும் மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தந்தது; அதுவும் அரசு வேலை ஆகும்.

கோயிலுக்கு மானியமாக கொடுக்கப்படும் நிலங்கள், குத்தகை மூலமாக அப்பகுதி விவசாயிகளுக்கு விடப்பட்டு, அதன் மூலம் விவசாய உற்பத்தி நடைபெற்றதுடன். அப்பகுதி மக்களுக்கு உணவு கிடைத்தது. அந்த விவசாயத்தை மேற்கொள்வதர்க்கு ஒரு சமூகம் என உருவானது, பண்ட மாற்று முறையில் ஒரு சமூகம் உருவானது, இவ்வாறு பல்வேறு சமூகங்கள் சேர்ந்து பொருளாதாரத்தை அடுத்த நிலைக்கு முன்னேற்றியது; உலகளாவிய வணிகத்தை மேற்கொள்ள உதவியது.

மேலும், கோயிலுக்கு கொடுக்கப்பட்ட பசுமாடுகள், அதனை பராமரித்து வளர்க்க அதற்கென ஒரு சமூகம், இதனால் கோயிலுக்கும் அந்த பகுதி மக்களுக்கும் பால் சார்ந்த பொருட்கள் கிடைக்க உதவியது.

கோயிலில் நெய்வேத்தியம், அன்னதானம் போன்றவற்றை மேற்கொள்ள சமையல் கலைஞர்கள். அதற்கென ஒரு சமூகம்.

சமையல் செய்யும் பாத்திரங்கள் செய்ய மண்பானை செய்வோர் மற்றும் பிற உலோக பாத்திரம் செய்வோர், அதற்கென ஒரு சமூகம். 

கோயில் நந்தவனம் மூலம் தெய்வ வழிபாட்டிற்கு தேவையான பூ மாலை மற்றும் அலங்கார சேவை செய்ய நந்தவனம் காப்போருக்கு வேலை. அதற்கென ஒரு சமூகம். 

இவ்வாறு அவர்கள் அனைவருக்கும் தொடர்ந்து வேலை. அதற்கென உற்சவங்கள் மற்றும் திருவிழாக்கள் நடைபெற்றன. இதனால், ஊர் மக்கள் ஒன்றுபட வழிவகை செய்தது. 

மங்கல இசைக் கருவிகளை இசைக்கும் கலைஞர்கள் அதற்கென ஒரு சமூகம். கூத்து நாடக கலைஞர்கள் என,
அவர்களுக்கும் வருட மானியம் மற்றும் வேலை. மாலை பொழுதில் ஆன்மிக கச்சேரி மற்றும் கலை நிகழ்ச்சிகள் என்று மனதிற்கு இனிய பொழுது போக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தெய்வத்திற்கான வஸ்திரங்கள் நெய்ய ஒரு சமூகம். அந்த வஸ்திரங்களை துவைக்க ஒரு சமூகம், மற்றும் ஆபரணங்கள் செய்ய ஒரு சமூகம். அவர்களுக்கும் தொடர்ந்து கோயிலில் மானியம் மூலம் வேலை. கோயிலை சுத்தமாக வைத்துக்கொள்ள, அதை செய்ய ஒரு சமூகம். அவர்களுக்கும் கோயில் மூலம் வேலை.

இவைகள் அனைத்தையும் நிர்வாகம் செய்ய, இவற்றின் கணக்குகளை பார்க்க, ஒரு சமூகம். இவர்கள் அனைவரும் அவரவர் வேலையை செய்ய, அதன் மூலம் வாழ்வாதாரம் பெறவும், கோயில் ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை ஆக செயல்பட்டதாக நாம் அறியமுடிகிறது. இது தான் ஆன்மிகம் சார்ந்த வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகும்.

இது போன்ற வாழ்க்கை முறையில் பெரு வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் வந்து ஊரில் உள்ள விளைநிலங்கள் சேதமடைந்தாலும், மீண்டும் விவசாயத்தை மேற்கொள்வதற்கு மூலதனமாக விதைகளைக் கோயிலின் கோபுரத்தில் உள்ள கலசத்தின் மூலம் சேமித்து வைக்கும் பழக்கம் ஏற்பட்டிருந்தது. இவை தொடர்ந்து 12 ஆண்டுகள் கெடாமலும் விஞ்ஞான முறையில் சேமித்து வைத்திருந்தனர். மேலும், அந்த பகுதியில் உள்ள நிலத்தில் விளையும் விளைச்சலுக்கு ஏற்ப விதைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது.

இதனை 12 வருடத்திற்கு ஒரு முறை அதை மாற்றி அமைத்து, அதனுடன் மராமத்து பணிகளை மேற்கொள்ள அனைவருக்கும் ஒரு கூட்டு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.

இப்படியாக அவர் அவருக்களுக்கு தெரிந்த பணிகளை செய்து, அதை சார்ந்த சமூகம் ஒன்றிணைந்து தன்னையும் காப்பாற்றிக்கொண்டு, தன்னிறைவு வாழ்க்கை என வாழ்வதற்கு கட்டமைக்கப்பட்டதே, நம் இந்து கோயில்கள்.

இவ்வாறு ஊருக்கு ஒரு கோயில், அதை சுற்றிலும் அனைத்து சமூகம். அந்த அந்த ஊரைச் சுற்றி உள்ள இயற்கை வளங்கள் பாதுகாக்கபட்டு, அதில் கிடைக்கும் மூலிகைகள் மூலம் வைத்தியம், அதற்க்கென ஒரு சமூகம் என,
ஊரைச் சுற்றியே, ஒரு தற்சார்பு வாழ்க்கை முறை.
இப்படி அமைக்கப்பட்டது தான் நம் பண்பாடும் கலாச்சாரமும். அதுவே, பொருளாதார கட்டமைப்பு.

இன்றைய நவீன காலத்தில் இருக்கும் மாத சம்பளம் அதற்கான ஊதியமாக பணம்; அந்த பணத்திற்கு ஏற்ப பொருள்; இந்த பொருளுக்கு ஏற்ற விலை மற்றும் அதில் ஏற்படும் ஏற்ற இறக்கம்; பண வீக்கம், பொருளாதாரம் மந்தம், வேலை இழப்பு என எந்த ஒரு பொருளாதார சுணக்கமும் பிரச்சனைகளும் இல்லாமல் செயல்பட்டு வந்தது. 

அதுமட்டுமின்றி, உயிருள்ள ஒருவரின் சொத்தை அவரின் அனுமதியின்றி அல்லது சம்மதம் இல்லாமல் பிறர் அபகரிப்பது செல்லாதோ அதுபோலத் தான் அனைத்து கோயில்களின் சொத்துக்கள் அந்தக் கோயிலில் வாழும் தெய்வங்களுக்கே சொந்தம். அவ்வாறு உயிருள்ள நபர், எப்படி தினமும் தங்களது அன்றாடம் குளிப்பாரோ, உடை உடுத்தி கொள்வாரோ, தினமும் உணவு உண்பாரோ, அதுபோலவே கோயிலில் இருக்கும் தெய்வங்களுக்கு உயிரூட்டி அந்த தெய்வங்கள் அங்கே வாழ்வதாகவும், அந்த கோயிலின் சொத்துக்கள், அந்த தெய்வங்களின் சொத்துக்கள் என்றும்; நம் வாழ்வாதாரத்திற்கு உதவும் ஒருவரை நாம் எப்படி போற்றி வணங்குவோமோ, அப்படி அந்த கோயிலில் இருக்கும் தெய்வங்களுக்கும் நன்றி செலுத்தும் விதமாக, அனைவரின் சார்பாக, பூசைகள் செய்து அதை மேற்கொள்ள ஒரு சமூகம். என பல்வேறு சமூகங்களின் ஒற்றுமைக் கூடமாக திகழ்ந்தது தான் நம் முன்னோர்களது வாழ்க்கை முறை.

இதனால்தான் "கோயிலில்லாத ஊரில் குடி இருக்காதே!" என்ற பழமொழியும் சொல்லி வைத்தார்கள். "செய்யும் தொழிலே தெய்வம்" என்ற பழமொழியும் இதிலிருந்து தோன்றி இருக்கலாம். இவ்வாறு, வாழ்ந்த நம் முன்னோர்களை பற்றி அறிந்து கொள்வதற்கு நாம் பெருமைப்பட வேண்டும்.

Comments: 1

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

100% உண்மை

கருத்துரையிடுக