இந்த வலைதளத்தில் தமிழர்களின் வாழ்க்கை முறைகள், பண்புகள், தெய்விகம், ஜோதிடம் ஆகியவற்றைப் பற்றிய பல்வேறு வகையான பயனுள்ள தகவல்களை அறியலாம் - இணையம் சார்ந்த எளிமையான கருவிகளை பயன்படுத்த அறத்திணை -யை பின்பற்றுக. For more follow ARATHINAI (arathinai.blogspot.com).

கோவிலில் இருக்கும் பலி பீடத்தை வணங்கும் முறை:

கோவிலில் இருக்கும் பலி பீடத்தை வணங்கும் முறை:
At ஆகஸ்ட் 14, 2023
கோவிலுக்குள் தரிசனம் செய்ய செல்வதற்கு முன், நம்மிடம் உள்ள மோசமான குணங்களை இங்கு பலியிட்டு செல்வதாக வேண்டி கொண்டு தான் செல்ல வேண்டும். 
அதாவது, கெட்ட நினைவுகளை 
பலி கொடுக்க வேண்டும். ஏனெனில், நாம் நம் மனதில் உள்ள தீய அழுக்குகளை விரட்டும் போது தான்; நாம் நல்ல மனிதனாக முடியும்.

மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்த பிறகு; கொடிமரத்தை வணங்கியபின், பலிபீடம் அருகில் தரையில் விழுந்து வணங்க வேண்டும்.  

மூலவருக்கு அபிஷேகம் நடக்கும் போதோ, சுவாமிக்கு நெய்வேத்தியம் படைக்கும் போதோ பலி பீடத்தை வழிபடுதல் கூடாது.

பலிபீடத்தை தொட்டுக் கும்பிடுவதோ, உரசிச் செல்வதோ கூடாது.

ஏனெனில், பலிபீடத்தின் மீது நம் கை பட்டு விட்டாலே, ஒருமுறை குளிக்க வேண்டும் என்று ஆகமங்கள் சொல்கின்றன.
 
ஆலயத்தின் கருவறை வடக்கு மற்றும் மேற்கு திசையை பார்த்தப்படி இருந்தால்; பலி பீடத்தின் இடது பக்கத்திலும், கருவறை கிழக்கு மற்றும் தெற்கு நோக்கி இருந்தால்; பலி பீடத்தின் வலது பக்கத்திலும் நின்று வணங்க வேண்டும். 

கொடி மரத்தை வழிபட்டு பிறகு தான் பலி பீடத்தை மனதார வழிபட வேண்டும். 

கோவில் பலிபீடம் அமைப்பின் தத்துவம்:

எல்லா கோவிலிலும் கொடி மரத்துக்கு அடுத்தபடியாக பலிபீடம் அமைத்து இருப்பார்கள். 

பொதுவாக, பலிபீடங்கள் மூன்று அடுக்கு பீடம் மீது தாமரை மலர் வடிவம் போல அமைக்கப்பட்டிருக்கும். அல்லது பீடங்களில் சிற்பங்கள் இருக்கும். சில ஆலயங்களில் வெறும் பீடம் மட்டும் இருக்கும். 

திருப்பதி போன்ற கோவில்களில் பலிபீடத்துக்கும் தங்க கவசம் போர்த்தி இருக்கிறார்கள்.

கோவில்களில் பலி பீடங்களில் உயிர்கள் பலி கொடுக்கப்படுவது இல்லை. மாறாக, நித்யபூஜையின் முடிவில், கோவிலுள்ள அனைத்து தெய்வங்களுக்கும் படையல் அல்லது அன்னம் (சாதம்) வைப்பர். இதனை பலி போடுதல் என்பர். அதாவது, தெய்வங்கள் சாப்பிட்டுச் செல்வதாக ஐதீகம். 

இதன் மூலம் கருவறைக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் 
பலிபீடத்திற்கும் கொடுக்கப்படுவதை 
அறியலாம். 

பலிபீடத்திற்கு அருகே சென்றவுடன் ஆணவம், மாயை, கன்மம் ஆகிய நமது மும்மலங்களையும் பலியிடுதல் வேண்டும். மற்றும் 'நான்' என்ற அகங்காரத்தையும் பலியிட வேண்டும்.

பலி பீடத்துக்கு மாயச் சக்கரம் என்றும் ஒரு பெயர் உண்டு. அதாவது நமது பிறப்பு, இறப்பு எனும் மாயச் சக்கரமாக 
பலிபீடத்தை கருதுகிறார்கள். இதை சுற்றி வந்து வழிபட்டால், "ஸ்தூல சூட்சமக் காரண சரீரங்களில் இருந்து என்னை விடுவித்து விடு" என்று வேண்டுவதற்கு சமமாகும். 

பலிபீடத்தை வழிபட்டு முடித்த பின், "நம் மனதில் மேலான எண்ணங்கள் தான் உள்ளன" என்ற நினைப்பை உருவாக்கி, அந்த நல்ல மனநிலையுடன் கருவறை அருகில் சென்று இறைவனை வழிபடும்போது, அந்த கோவிலில் வீற்றிருக்கும் இறைவனின் அருள் முழுமையாக கிடைக்கப் பெறும்.

உயிர்ப்பலியில்லாத இந்த ஆன்மிகப் பலிபீடமானது, கோயில் வழிபாட்டில் மிகவும் முக்கியம் என அறியப்படுகிறது.

Comments: 0

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக