இந்த வலைதளத்தில் தமிழர்களின் வாழ்க்கை முறைகள், பண்புகள், தெய்விகம், ஜோதிடம் ஆகியவற்றைப் பற்றிய பல்வேறு வகையான பயனுள்ள தகவல்களை அறியலாம் - இணையம் சார்ந்த எளிமையான கருவிகளை பயன்படுத்த அறத்திணை -யை பின்பற்றுக. For more follow ARATHINAI (arathinai.blogspot.com).

புண்ணிய காலங்கள்

புண்ணிய காலங்கள்
At ஆகஸ்ட் 23, 2023
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் நாட்காட்டிகளில் பார்த்தோம் என்றால் அதில் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாட்கள் ஒரு சிறப்பை குறிக்கும் புண்ணிய காலம் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அவையே "விஷூ புண்ணிய காலம், விஷ்ணுபதி புண்ணிய காலம் மற்றும் ஷடசீதி புண்ணிய காலம்" ஆகும்.

தமிழ் நாட்காட்டிகளை பொருத்தவரையில், ஒவ்வொரு மாதமும் சூரியன் பெயர்ச்சியாகும் ராசிகளைக் கொண்டு, அந்த மாதம் கணக்கிடப்படுகிறது. அந்த வகையில், 12 தமிழ் மாதங்களில் உள்ள சித்திரை, ஆடி, ஐப்பசி மற்றும் தை ஆகிய தமிழ் மாதங்கள் யாவும் படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மாவிற்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதங்களில் வரும் முதல் நாள் "விஷூ புண்ணிய காலம்" என்று அழைக்கப்படுகிறது. இந்த நாட்கள் நம் தலையெழுத்தை மாற்றி எழுத கூடிய பிரம்மாவை வழிபடக்கூடிய நாளாக விளங்குகிறது. இந்த மாதங்கள் யாவும் சூரியன் பெயர்ச்சியாகும் இராசிகளான மேஷம், கடகம், துலாம் மற்றும் மகரம் ஆகும். அதாவது, சூரியன் சர இராசியில் இருக்கும் பொழுது அந்த மாதங்கள் யாவும் பிரம்மாவை வழிபடுவதற்கு உகந்த மாதங்களாக நம் முன்னோர்கள் கூறுகின்றனர்.

அதேபோல், விஷ்ணு பகவானை வழிபடுவதற்குரிய மாதங்களாக நான்கு மாதங்கள் குறிப்பிடப்படுகிறது. அவையே வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி ஆகும். அதிலும் குறிப்பாக, இந்த மாதங்களில் வரக்கூடிய முதல் நாளானது "விஷ்ணு புண்ணிய காலம்" என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நாட்களில் விஷ்ணு பகவானை வழிபடுவது மிகவும் சிறப்புக்குறியதாக முன்னோர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, ஏகாதசி என்ற திதியானது, விஷ்ணு பகவானை வழிபடுவதற்கு உரிய திதியாக கருதப்படுகிறது. அதில் கிடைக்கும் பலனை காட்டிலும், இந்த விஷ்ணு புண்ணிய காலத்தில் வழிபடுவது மிகவும் சிறப்புமிக்கதாக முன்னோர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இந்த மாதங்கள் யாவும் சூரியன் பெயர்ச்சி செய்யும் இராசிகளானது ரிஷபம், சிம்மம், விருச்சிகம் மற்றும் கும்பம் ஆகிய ஸ்திர இராசிகள் ஆகும்.

அந்த புண்ணிய காலங்கள் வருடத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வருகிறது. இந்த நாட்கள் அனைவரும் தவறாமல் மகாவிஷ்ணுவையும் தாயாரையும் வணங்கி நம் வேண்டுதல்களை வைக்க வேண்டும். இந்த விஷ்ணு புண்ணிய காலங்கள் என்பது மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான நரசிம்மர் அவதாரத்தின் நோக்கம் நிறைவேறிய பின்னரும் நரசிம்மரின் உக்கரத்தை குறைக்க முடியாமல் தவித்த, தேவர்களும் முனிவர்களும் நரசிம்மரின் உகரத்தை தணிக்க மகாலட்சுமியை சரணடைந்தனர். அப்பொழுது மகாலட்சுமி நரசிம்மரின் அருகில் வந்த பொழுது, மகாலட்சுமி நிழல் நரசிம்மரின் மீது பட்டவுடன், உக்கரம் தணிந்து சாந்த சொரூபமான லட்சுமிநரசிம்மராக காட்சியளித்தனர். அதுவே விஷ்ணு புண்ணிய காலம் ஆனது என்று சான்றோர்கள் குறிப்பிடுகின்றனர்.

எனவே, அன்றைய தினத்தில் விரதம் இருந்து வழிபடும் போது பல ஏகாதசி விரதங்களையும் வழிபாடுகளையும் செய்த பலன்களை ஒரு சேர கிடைக்க செய்யும், என்பதே இதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அன்றைய தினங்களில் பெருமாள் கோயிலுக்கு செல்பவர்கள், கோயிலில் இருக்கும் கொடி மரத்தை வணங்கி பிரகாரத்தை 27 முறை வலம் வர வேண்டும். எண்ணிக்கைக்காக, கைகளில் 27 பூக்களை எடுத்து ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு பூவை கொடி மரத்தின் முன் வைத்து வலம் வரலாம். மீண்டும் கொடி மரத்தை வணங்கிய பின் கோவிலில் அருள் பாலிக்கும் தாயார் மற்றும் பெருமாளை தரிசனம் செய்து நமது நியாயமான வேண்டுதல்களை சமர்ப்பிக்கலாம். அவைகள் அடுத்த வரக்கூடிய 3 விஷ்ணுபதி புண்ணிய காலத்திற்குள் பூர்த்தியாகும் என்று நம்பிக்கையாக இருந்து வருகிறது. எனவே, அப்படிப்பட்ட முக்கியமான நாட்களை தவறவிட்டாமல் வழிபட வேண்டும்.

அதேபோல, சிவபெருமானுக்கும் உரிய தமிழ் மாதங்களாக ஆனி, புரட்டாசி, மார்கழி மற்றும் பங்குனி மாதங்கள் இருக்கிறது. அந்த மாதங்களில் வருகின்ற முதல் நாள் "ஷடசீதி புண்ணிய காலம்" என்று நம் முன்னோர்களால் குறிப்பிடப்படுகிறது. இந்த நான்கு நாட்களில் சிவபெருமானை மனம் உருகி வேண்டி, நமது நியாயமான கோரிக்கைகளையும் வேண்டுதல்களையும் வைத்து வணங்க வேண்டும். இந்த மாதங்கள் யாவும், சோதிட ரீதியாக சூரியன் உபய இராசிகளில் பெயர்ச்சியாகும் பொழுது அமைகிறது. அவையே மிதுனம், கன்னி, தனுசு மற்றும் மீனம் ஆகிய இராசிகள் ஆகும்.

Comments: 0

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக