இந்த வலைதளத்தில் தமிழர்களின் வாழ்க்கை முறைகள், பண்புகள், தெய்விகம், ஜோதிடம் ஆகியவற்றைப் பற்றிய பல்வேறு வகையான பயனுள்ள தகவல்களை அறியலாம் - இணையம் சார்ந்த எளிமையான கருவிகளை பயன்படுத்த அறத்திணை -யை பின்பற்றுக. For more follow ARATHINAI (arathinai.blogspot.com).

கல்வியும் வேலைவாய்ப்பும்

கல்வியும் வேலைவாய்ப்பும்
At செப்டம்பர் 16, 2023
தமிழ்நாட்டு மக்கள் கல்வி கற்க ஆரம்பித்தது கர்மவீரர் காமராஜர் ஆட்சி காலத்தில் தான். அவர் திறந்து வைத்த பல பள்ளிக்கூடங்கள் தான் இன்று தமிழகத்தில் பலரும் படித்து பட்டம் பெற்று இருக்க முக்கிய காரணம். அன்றைய காலகட்டங்களில் கல்வி கற்றவர் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதனால் கல்வி கற்காதோர் தங்களுக்கு கிடைத்த வேலைகளை, தங்களின் திறமை அடிப்படையில் பணிகளை செய்து வந்தார்கள். ஆனால் அன்றைய காலகட்டத்தில் கல்வி கற்று, பட்டம் பெற்றால் மட்டுமே உயர்நிலை வேலைகளை செய்ய முடியும். "கௌரவமாக, வேர்வை சிந்தாமல், கை நிறைய பணம் சம்பாதிக்க முடியும்" என்ற ஒரு நம்பிக்கை மக்களிடையே பரவலாக இருந்தது. அதனாலேயே "தங்கள் பிள்ளைகள், தங்களை போல் கஷ்டப்படக் கூடாது" என்ற நல்லெண்ணத்திற்காக, "உடல் உழைப்பில்லாத மற்றும் அதிக ஊதியம் பெறக்கூடிய வேலைக்கு அனுப்ப வேண்டும்" என்ற நோக்கத்திற்காக மட்டுமே பெற்றோர்கள் பிள்ளைகளை படிக்க அனுப்பினார்கள்.

அவ்வாறு கல்வி கற்று பட்டம் பெரும் விகிதம் காலப்போக்கில் மாறிக்கொண்டே வந்தது, இன்றைய காலகட்டத்தில் "அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் இலவச கல்வி" என இருக்க பலரும் படித்து பட்டம் பெற்று விட்டார்கள். அந்த படிப்புக்கேற்ற வேலைக்காக வேலையைத் தேடி, பட்டம் பெற்ற அனைவரும் மேல்நிலை வேலைகளையே செய்து வந்தனர். அதனால் கீழ்நிலை வேலையை செய்ய யாரும் முன்வரவில்லை. அதன் தாக்கம் இன்றளவில், அவர்களின் அடுத்த தலைமுறைக்கு படிப்பிற்கேற்ற வேலை பலருக்கு கிடைக்கவில்லை. ஆனால் அதற்கு நேர்மாறாக கீழ்நிலை வேலைகள் செய்ய அதிக எண்ணிக்கையில் ஆட்கள் தேவைப்பட்டது. இதனால் அந்த வேலைகளை செய்வதற்கு, வெளி மாநிலத்தவர்கள் இங்கே வந்து அந்த வேலைகளை செய்கிறார்கள். காரணம் அவர்களில் பெரும்பாலும் படிப்பறிவு பெறாதவர்கள், பெரும்பான்மையானவர் கல்வியில் இடைநின்றவர்கள், பட்டம் பெறாதவர்கள். அதனால் கீழ்நிலையோ நடுநிலையோ ஏதோ ஒரு வேலையை செய்து தங்கள் குடும்பத்தை நடத்திக் கொள்ள வருகிறார்கள். இவ்வாறு கால சூழலுக்கேற்ப "எது மிகுதியாகிறதோ அதற்கு இணையாக மற்றொன்று தாழ்ந்து விடுகிறது". அதுதான் நமது தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் நடந்து கொண்டு வருகிறது என்பதே நிதர்சனமான உண்மை.

இதேபோல் நம் தமிழ்நாட்டை பொருத்தவரையில், அவர்களில் பெரும்பாலானோர் தங்களுக்கு கிடைத்த, கீழ்நிலை வேலையை செய்ய ஆரம்பித்து விட்டனர். அப்படியே ஒரு சிலர் செய்ய வந்தாலும், அவர்களின் சுற்றுப்புறத்தில் வசிப்பவர்கள் "படித்துவிட்டு இந்த வேலையை செய்கிறீர்களா?" என்று ஏளனமாக பேசி, குறை சொல்லி அவர்களை வாழ்வாதாரத்தை தாழ்வாக ஏளனம் செய்கிறார்கள். பொதுவாக இந்த காலகட்டத்தில் இருக்கும் மக்கள், தங்களது பிள்ளைகள் "இங்கு வேலை செய்கிறார்கள், இந்த நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள்" என்று கூறி தங்களது உற்றார் உறவினர்களின் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்?, எங்கு வேலை செய்கிறார்கள்?, எவ்வளவு ஊதியம் வாங்குகிறார்கள்?" என்று கேட்பதில் ஒரு நலம் விசாரிக்கும் வழக்கம் வந்திருக்கிறது. தங்கள் உற்றார் உறவினரின் பிள்ளைகள் வெளியூரில் வேலை செய்தாலும், வெளிநாடுகளில் வேலை செய்தாலும் கௌரவம் என்று நினைக்கிறார்கள். ஆனால் உள்ளூரில் வேலை செய்வதை கௌரவ குறைச்சலாக நினைக்கிறார்கள். அதேபோல் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை இல்லாமல் கீழ்நிலை வேலை செய்தாலும் ஏளனமாக பார்க்கிறார்கள், குறை சொல்லுகிறார்கள். அதுவே கற்ற கல்விக்கு சமமான வேலை கிடைக்கும் போது தான், அவர்களை இந்த சமூகம் மதிக்கிறது. ஏனென்றால், வாழ்க்கையில் தோல்வி உற்றவன் போல, தகுதி குறைவானவராக, இந்த சமூகம் கருதுகிறது. இதனால் தான் நமது நாட்டில் பட்டம் பெற்ற மக்கள் அடிமட்ட வேலைகளுக்கு வராத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

இதில் இருந்து நமக்கு தெரிய வருவது என்னவென்றால், நமது உற்றார் உறவினர்கள் என்றாலும் சரி. நமது பிள்ளைகள் என்றாலும் சரி. தாங்கள் கற்ற கல்விக்கேற்ற வேலை கிடைக்கவில்லை என்றாலும் சரி. திறமைக்கு ஏற்ற வேலை செய்தாலும் சரி. கிடைத்த ஏதோ ஒரு வேலையை செய்தாலும் சரி. அவர்களை பிறருடன் ஒப்பிட்டு, ஏளனமாகவோ தகுதி குறைவாக நடத்தக்கூடாது. அவர்கள் செய்கிற வேலையை திறம்பட செய்யட்டும். பிற்காலத்தில் தொழில் துவங்கி மென்மேலும் வளரட்டும், என்று நல்ல அறிவுரைகளை கூறுங்கள். அவர்களை ஊக்கப்படுத்துங்கள். 

இன்றைய காலக்கட்டங்களில் பட்டப்படிப்புகளை, வேலைவளங்கும் நிறுவனங்களும் சரி, நம் சமுதாயத்திலும் சரி அவை பெரிதாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. மாறாக நல்ல திறமைக்குதான் இங்கு தேவையும் மதிப்பும் அதிகம் இருக்கிறது. அதுவே உண்மை. இது போன்ற உயர் கல்வி பட்டப்படிப்புகளில் பெருமளவு செலவு செய்து படிப்பதனால் பயனில்லை என்று மக்கள் உணரும் போது பட்டப்படிப்புகளுக்கும் உயர்கல்விகளுக்கும் தேவையில்லாமல் போய்விடும். இது கல்வி நிறுவனங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி "திறன்வளர்க்கும்" மையங்களாக மாற்றப்படலாம். 

அன்றைய காலகட்டத்தில் அடிமட்ட வேலைகளை செய்த மக்கள் பணத்தை சேமித்து, வீடு கட்டி, சொத்து சுகங்களோடு வாழ்ந்தார்கள், அதனை அடுத்து தலைமுறைக்கு இட்டு சென்றார்கள். அதுபோலத்தான் இனிமேல் வருங்காலங்களில் இருக்கும். பட்டம் பெற்ற அனைவரும் மேல்நிலை வேலைக்கு சென்று விட்டால், கீழ்நிலை வேலைகளை யார் செய்வார்கள். இது போன்ற கீழ்நிலை வேலைகளை, தொழிலாக எடுத்து நடத்தினால் நல்ல வருமானம் கிடைக்கும். அதில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். இதனால் அனைவருக்கும் வேலை இல்லாமல் இருக்கப் போவதுமில்லை, "தங்களுக்கு கிடைத்த பிடித்த ஏதேனும் வேலையை செய்யட்டும்" அவர்கள் சிறந்து விளங்க நல்லதொரு வாழ்த்துகளையும், நல்ல அறிவுரை கூறுங்கள்.

நன்றி...


Comments: 0

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக