இந்த வலைதளத்தில் தமிழர்களின் வாழ்க்கை முறைகள், பண்புகள், தெய்விகம், ஜோதிடம் ஆகியவற்றைப் பற்றிய பல்வேறு வகையான பயனுள்ள தகவல்களை அறியலாம் - இணையம் சார்ந்த எளிமையான கருவிகளை பயன்படுத்த அறத்திணை -யை பின்பற்றுக. For more follow ARATHINAI (arathinai.blogspot.com).

உடற்பயிற்சியும் நடைபயிற்சியும்

உடற்பயிற்சியும் நடைபயிற்சியும்
At ஜூன் 26, 2024
இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழலுக்கு ஏற்றவாறு, மக்கள் தங்களது உடல் நலத்தில் அக்கறை கொள்ளும் விதமாக, பல்வேறு வகையான செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். உடல் ஆரோக்கியமான வைத்துக் கொள்வதற்கு பல காரணிகள் இருந்தாலும் முக்கியமான இரு காரணிகள் என்றால், உணவு முறையும் உடற்பயிற்சியும் தான். 

அதிலும் குறிப்பாக உடல் உழைப்பு இல்லாத வேலைகளில் பணிபுரிபவர்கள், பெரும்பாலும் உடற்பயிற்சி செய்வதற்கு மிகவும் முக்கியத்துவம் காட்டி வருகின்றனர். உடல் பருமனை குறைக்க வேண்டும் என்றால், அனைவருக்கும் நினைவில் வருவது உடற்பயிற்சி செய்வது மட்டுமே… ஆனால், யாருக்கும் உணவு கட்டுப்பாடு பற்றி போதிய விழிப்புணர்வு இல்லை…

இருந்தபோதிலும் உடற்பயிற்சி செய்வதற்கென; பிரத்தியேகமான உடற்பயிற்சி கூடங்கள், ஆங்காங்கே தோன்றி வருகிறது. ஏன் உடற்பயிற்சி செய்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்? இவ்வாறு உடற்பயிற்சி செய்வதால், உடலில் ஏற்படும் தாக்கங்கள் என்ன? இதில் நம் அன்றாட உடல் செயல்பாட்டிற்கும் உடற்பயிற்சிக்கும் உள்ள வித்தியாசம் என்ன? என்பதை இதில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்…

பொதுவாக மக்கள் உடற்பயிற்சி செய்வதற்கு முக்கிய காரணம் தங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்கவும் உடல் பருமனை குறைத்து நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும், என்பதற்காகவே… இதில் இரத்த சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் உட்பட…

உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு போதிய இட வசதியும் நேரமும் இல்லாதவர்கள்; உடற்பயிற்சி கூடங்களை நாடுகிறார்கள். ஆனால், மற்றவர்கள் தங்கள் வீட்டு மாடிகளிலும் அருகில் உள்ள பூங்காக்களிலும் நடை பயிற்சியை மேற்கொள்கிறார்கள்.

நம் உடலில் இருக்கும் கொழுப்பை குறைப்பதில், உடற்பயிற்சிக்கும் நடைபயிற்சிக்கும் சில முக்கிய வேறுபாடுகள் இருக்கிறது. இதை நாம் தெரிந்து கொண்டால், உடல் பருமனை கட்டுப்படுத்து எளிதாகிவிடும். 

இணையத்தில் இருக்கும் பல்வேறு ஆய்வு கட்டுரைகளின் அடிப்படையில், நாம் செய்யும் உடற்பயிற்சிக்கும் அன்றாட நடைப்பயிற்சிக்கும், நம் உடலில் தங்கி இருக்கும் கொழுப்பை குறைப்பதற்கு வேறுபாடு இருக்கிறது என்று அறியலாம்.

அந்த முக்கிய வேறுபாடுகள் தெரிந்து கொள்வதற்கு முன், நம் உடல் செயல்பாடுகளுக்கு ஆற்றலை எவ்வாறு பயன்படுத்துகிறது, என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

முதலில் உடற்பயிற்சியை பற்றி பார்ப்போம்…

நம் உடல் ஆற்றலுக்காக கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு சத்துக்களை பயன்படுத்துகிறது. இதில் எந்த வகையான செயல்பாடுகள் என்பதை பொறுத்து, உடல் செலவழிக்கும் சத்து வகைகளை தீர்மானிக்கிறது. அப்படி இருக்கையில் உடற்பயிற்சியை நாம் மேற்கொள்ளும் பொழுது, அவை முதலில் தசைகளிலும் கல்லீரலில் சேமிக்கபட்டு இருக்கும் கிளைக்கோஜன் எனும் கார்போஹைட்ரேடுகளை முதலில் பயன்படுத்த தொடங்கிவிடும்.

இந்த சத்துக்களே உடனடியான மற்றும் கடினமான உடல் செயல்பாடுகளுக்கு பயன்படுத்தக்கூடிய சத்துக்கள் ஆகும். இவை குறுகிய கால செயல்பாடுகளுக்கும் ஆற்றலை வழங்குவதற்காக உள்ளது. இவை குறைந்த உடன், உடலில் இருக்கும் கொழுப்பு சத்துக்களை பயன்படுத்த துவங்கி விடும். ஏனென்றால், கொழுப்பு சத்துகள் உடலுக்கு ஆற்றலாக மாறுவதற்கு, சற்று நேரம் எடுத்துக் கொள்வதால் தான், நாம் உடற்பயிற்சி செய்ய துவங்கிய சிறிது நேரத்திற்கு பின்பு உடலில் சோர்வும் மூச்சு வாங்குதலும் ஏற்படுகிறது.

இப்பொழுது நடை பயிற்சியும் அன்றாட உடல் செயல்பாடுகளும் பற்றி பார்ப்போம்…

நமது அன்றாட இயல்பான செயல்பாடுகளுக்கு உடலில் ஆற்றலானது, உடலில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் கொழுப்பு சத்துக்களை பயன்படுத்துகிறது. இந்த கொழுப்பு சத்தானது, உடலில் ஆற்றலாக மாறுவதற்கு சற்று நேரம் எடுத்துக் கொள்ளும். நம் உடல் செயல்பாடுகள் மெதுவான மற்றும் நீண்ட நேரம் செய்யக் கூடியதாக இருப்பதால், கொழுப்பு சத்துக்கள் மட்டுமே பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் உடலில் தங்கி இருக்கும் கொழுப்பு சத்துகளை மற்றும் உடல் பருமனை குறைப்பதற்கு, நம் அன்றாட உடல் செயல்பாடுகள் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இவ்வாறு உடல் செயல்பாடுகள் குறைவாக உள்ள பணிகளை செய்பவர்கள், குறைந்தது நடை பயிற்சியாவது தினமும் மேற்கொள்ள வேண்டும். அந்த நடை பயிற்சியானது சற்று நீண்ட தூரமாகவும், நீண்ட நேரம் செய்ய கூடியதாகவும் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் பொழுது மட்டுமே, உடல் சோர்வு இல்லாத; உடல் பருமனை குறைக்கும் அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், கார்போஹைட்ரேட் என்பது உங்கள் கையில் இருக்கும் பணம் போல. அதுவே கொழுப்பு சத்து என்பது, உங்கள் வங்கியில் சேமிக்கப்பட்டு இருக்கும்; சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தை போல. தங்கள் கையில் இருக்கும் பணத்தை எளிமையாக, உடனடியாக செலவு செய்ய முடியும். இதுவே சேமிப்பு கணக்கில் இருக்கும் பணத்தை செலவு செய்ய, பல்வேறு வழிமுறைகளை பின்பற்றிய பின்பு தாமதமாக பணத்தை செலவு செய்ய முடியும். அதுபோலத்தான் நம் உடலில் இருக்கும் கொழுப்பு சத்துக்களும் இவை செலவழிக்க சற்று நேரம் எடுத்துக் கொள்ளும். இவை கிளைக்கோஜன் ஆக மாற்றி ஆற்றலாக பயன்படுத்துகிறது. அதனால் தான் கொழுப்பு சத்துகள் குறைப்பதற்கு காலதாமதம் ஏற்படுகிறது.

இதில் கருத்தில் கொள்ள வேண்டியது, உடற்பயிற்சியும் அன்றாட செயல்பாடுகளும் உடல் பருமனை குறைக்க முக்கிய பங்கு வகிக்கின்றது. நாம் எடுத்துக் கொள்ளும் உணவானது கலோரிகளாக மாற்றப்படுகிறது. இந்த கலோரிகளை செலவழிப்பது தான், உடல் பருமனை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடினமான உடற்பயிற்சியானது அதிகப்படியான கலோரிகளை செலவழித்து விடும். சாதாரணமான உடல் உழைப்பு மற்றும் நடைப்பயிற்சி, இவை குறைவான மற்றும் பொறுமையாக கலோரிகளை செலவழித்து விடும். இவற்றுள் கடினமான உடற்பயிற்சியானது உடல் சோர்வை ஏற்படுத்தும் மற்றும் மூட்டுகளுக்கும் எலும்புகளுக்கும், அது சிறிதளவேனும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் மற்றும்
நீண்ட நேரம் உடற்பயிற்சி மேற்கொள்ளும் பொழுது மட்டுமே, உடலில் உள்ள கொழுப்பு சத்துகளை குறைத்து, ஆற்றலாக மாற்றுகிறது என்று ஆய்வறிக்கைகள் கூறுகிறது.

சாதாரணமான மற்றும் அன்றாட உடல் உழைப்பினையும் நடைப்பயிற்சியையும் வயதானவர்கள் மற்றும் பிற பக்கவிளைவுகளால் அவதிப்படுபவர்களும் இதனை பின்பற்றலாம், என ஆய்வறிக்கைகள் கூறுகிறது. இருப்பினும் தங்களின் உடல் நலத்தின் அடிப்படையிலும் மருத்துவரின் ஆலோசனைபடியும், அதற்கு ஏற்ப உடற்பயிற்சிகளையும் செயல்பாடுகளை வைத்துக்கொள்ள வேண்டும், என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

Comments: 0

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக