அங்கே சென்று பார்த்தால், வழக்கமாக கூட்டத்தை விட, குறைவாக தான் இருந்தது. காரணம் என்னவோ!, பரவலாக மழை. அத்தியாவசிய தேவைகளுக்கு வாங்க வருவோர் மட்டும் வந்தனர். நாங்களும் அவ்வாறே அங்கே சென்று இருந்தோம். அந்த மழைக்கு மத்தியில், சிறு சிறு கூடாரங்களை அமைத்து, விவசாயிகள் விற்பனை செய்து வந்தார்கள்.
அங்கும், மழை தூவிக் கொண்டிருந்தது. உடனே “சட சட” என்று சத்தத்தோடு மழை கனமாக பெய்ய துவங்கியது. மழைக்கு நடுவே, ஒரு சத்தம் “இரண்டு கிலோ 100, இரண்டு கிலோ 100” என்று வெங்காயம் விற்பவர் கூச்சலிட்டார். அந்தப் பக்கம் “ஒன்றரை கிலோ 50, ஒன்றரை கிலோ 50” என்று தக்காளி விற்பவர் கூச்சலிட்டார். குடை பிடித்தவாறு கடை கடையாக சென்று, தேவையான காய்கறிகளை வாங்கிக் கொண்டிருந்தோம்.
பிறகு, தக்காளி வாங்கி கொண்டு இருந்தோம். அங்குள்ள கூடாரத்தில், ஒரு ஓரமாக வயதான ஒரு பாட்டி, மழை குளிருக்கு நடுங்கியவாறு; உட்கார்ந்து கொண்டிருந்தார். சுருங்கிய தோலும் மெலிந்த தேகமும், அந்த பாட்டியின் வயதை கூறியது. யாருக்கோ காத்திருப்பது போல் தெரிந்தது. நாங்கள் வாங்கிய தக்காளியை கூடையில் நிரப்பிக் கொண்டிருந்தோம்.
அப்போது, ஒரு குரல்:”கண்ணு இந்த கீரை வாங்கிக்கங்க பா.., உடம்புக்கு நல்லது.”, என்று அந்த மழைக்கும் குளிருக்கும் நடுவே, சத்தமிட சத்து இல்லாமல், கீரை பொட்டலத்தை நீட்டினார், அந்த பாட்டி.
“பாட்டி, என்ன கீரை?” என்றேன்.
“பண்ணைக் கீரையும் தொய்யக் கீரையும் சேர்த்து இருக்குபா…”
“இலைய மட்டும் பறித்து வச்சிருக்கேன் பா கண்ணு…” என்று, பொட்டலங்களை பிரித்துக் காண்பித்தார். அந்தக் கீரைகள் பார்க்க நன்றாகவே இருந்தது.
“ஒன்னு பத்து ருபா, ஒன்னு வாங்கிக்க பா கண்ணு…” என்றார்.
“கடையல் செஞ்சு சாப்பிட்டா நல்லாருக்கும் பா கண்ணு”. என்றார். என் அம்மாவும் இரண்டு கீரை பொட்டலங்களை வாங்கு என்றார்.
அந்தப் பாட்டியிடம் கீரைக்கு விலை கேட்க மனம் வரவில்லை. உரிமையாக, தன் பேர குழந்தையிடம் கேட்பது போல் இருந்தது.
“பாட்டி இந்தாங்க, 20 ரூபா, ரெண்டு பொட்டலம் குடுங்க” என்று வாங்கினேன். ஏதோ கஷ்டத்தில் இருப்பவருக்கு கை கொடுத்து உதவியது போல், என் மனதில் நினைத்தவரே; அருகில் இருக்கும் கடைக்கு, காய்கள் வாங்க சென்றோம்.
அங்கு காய்கறிகள் விற்றுக் கொண்டிருந்த ஒரு அம்மா, “கீரை ஏதாவது வாங்குறீங்களா மா?” என்று கேட்டார்.
அவரிடமோ, பல வகை கீரைகள் இருந்தது, “வேண்டா! நாங்க ஏற்கனவே அந்த பாட்டிகிட்ட, கீரை வாங்கிவிட்டோம்.” என்று கூறினோம்.
ஆனால், அவர்களோ விடுவதாக தெரியவில்லை, “அந்தப் பாட்டிகிட்ட வாங்காதீங்க!, எல்லாம் சொத்தையும் புழுவுமாக இருக்கும்” என்று கூறினார்கள். அதைக் கேட்டவுடன், அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அவர்கள் முன்னே, அந்தப் பாட்டியிடம் வாங்கிய கீரை பொட்டலங்களை பிரித்து காண்பித்தார்கள் என் அம்மா…
“பாருங்க எல்லாம் நல்லாத்தான் இருக்கு, உங்ககிட்ட கீரை வாங்கலங்கிரக்காக, அந்த பாட்டிய தப்பா சொல்லாதீங்க” என்று சுருக்கென்று உரைக்குமாறு கூறினார்கள்.
ஆனால், அந்த பாட்டியும் இவர்களும் இருவருமே, ஏழை சிறு விவசாயிகள் தான். அப்படி இருக்க அந்தப் பாட்டியின் வியாபாரத்தை கெடுக்கும் நோக்கில், இவ்வாறு கூறுவது தவறானது தானே. என் அம்மா கூறியது சரி என்று மனதில் பட்டது.
ஆனால், அதற்கு மாறாக, “அந்தப் பாட்டியிடம் வாங்கிட்டீங்களா! பரவாயில்லை, என்கிட்ட இந்த கீரை இருக்கு, இதை வாங்கிக்குங்க”, என்று கூறி இருந்தால், அன்று அவர்களுக்கும் வியாபாரம் நடந்திருக்கும்.
இந்தத் தள்ளாத வயதிலும், கீரைகளை இலைகளாக பறித்து; அதனை விற்று; அவர்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார், அந்த பாட்டி. அந்த வயதான நிலை யாருக்கும் வரும். பார்த்துக்கொள்ள பேரன், பேத்திகள் இருக்கிறார்களா?; ஆதரவாக கணவரும் பெற்ற பிள்ளைகளும் இருக்கிறார்களா?, என்று தெரியவில்லை. இருப்பினும், இந்த வயதிலும் சிரமம் பார்க்காமல், கீரை விற்கிறார், அந்த பாட்டி. ஒருசிலர், தன் சுயநலத்திற்காக, பிறர் மீது தவறாக கூறுவது, ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக் கூடாது.
அங்கிருந்து நகர்ந்தோம். “கீரை கத்தையா வாங்கினாலும், அதில் சொத்தையும் புழுவும் இருக்கும். அப்படி கத்தையா வாங்கினாலும், அதைப் பறித்து, கழுவி சமையல் செய்றதுக்கு பதிலா, இந்த பாட்டி கொடுத்த கீரைய வைச்சு சமச்சிடலாம்”, என்று என் அம்மா என்னிடம் கூறினார்கள்.
இதில் இருந்து ஒன்று புரிந்தது. நாம் நம் வாழ்க்கையை பயணமாக நினைத்தால், சக மனிதர்கள் சக பயணிகளாக இருப்பார்கள். அல்லாமல், பந்தயமாக நினைத்தால், அங்கே சக போட்டியாளாராக இருப்பார்கள்.
பிறர் மனதில் நல்லதை விதைக்க, அன்று கண்ட காட்சியை, சிறுகதையாக எழுதியிருக்கிறேன்.
#வயதான #விவசாயின் #சிறுகதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக