நம் முன்னோர்கள், நமக்கு இட்டுச்சென்ற கொடை என்றால், அவர்களின் வாழ்வியல் நெறியும் வாழ்க்கை முறையும். ஆனால், வருகின்ற தலைமுறை; இதனை பின்பற்றிட இயலுமா? என்ற ஐயமும் எழுகிறது.
இந்த பெயர் வைக்கும் முறை; உண்மையில் “குழந்தையும் தெய்வமும் ஒன்று” என்ற பழமொழிக்கு ஒப்பாக பொருந்தி வந்தாலும், தங்களது குழந்தைகளை கடவுளாக கருதுவதாக இருக்கலாம், என எண்ணினாலும். அவைகளை எல்லாம் விடவும், மேலான ஒரு செயலை நம் முன்னோர்கள் முன்னிலைப் படுத்தி இருக்கிறார்கள், என்ற எண்ணக்கூடும்.
அவ்வாறு, தன் குழந்தைக்கு வைக்கும் இறைவன் நாமத்தை; அனுதினமும் உச்சரிக்க வேண்டும். அப்படி, உச்சரிக்கும் வழக்கம் இருந்தால், என்றொரு நாள் அந்த கடவுளின் அருள் மற்றும் அனுக்கிரகம் கிடைக்கும், என்ற உயர்ந்த எண்ணத்தில் தான் இருக்க வேண்டும்.
இதற்கு சான்றாக, மகாபாரதம் இதிகாசத்தில், துகில் உரிக்கும் நேரத்தில்; தனக்கு சபையினர் யாவரும் உதவுமுடியாத நிலை கண்டு, அந்த கண்ணனை தவிர யார் உதவுவார்? என்றுணர்ந்த பாஞ்சாலி; கண்ணனை ஒருமனதாக அழைத்ததன் விளைவாக, அந்த கண்ணன் துகில் கொடுத்து உதவி செய்தார்.
இதில் இருந்து இறைவன் நாமம் உச்சரிக்கும் பொழுது, ஏதேனும் பலன் கிடைக்கும். அதற்கு வலு சேர்க்கும் விதமாக, நான் பெற்ற அனுபவமும் உண்டு.
இரண்டு நாளுக்கு முன் நடந்த, எங்கள் ஊர் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்றிருந்தோம். அங்கே தெரு ஓரங்களில் கடைகள் அமைத்திருந்தார்கள். அப்பளம் விற்கும் கடையில், “டெல்லி அப்பளம்” என்று விற்றுக் கொண்டிருந்தார்கள். அந்த அப்பளங்களில், மிளகாய் தூள் சற்று அதிகமாகவே தூவப்பட்டிருந்தது. ஆசைப்பட்டு அளவுக்கு மீறி, வாங்கி சாப்பிட்டு விட்டேன். அன்று இரவில் இருந்து, ஏதோவொரு மாற்றம். வாயில் நமைச்சல் இருப்பது போல் உணர்வு. அது வயிற்று எரிச்சல் மற்றும் வாய் புண் ஏற்பட காரணமாகிவிட்டது.
அன்று அதிகாலை, வைகுண்ட ஏகாதசி பெருவிழா. காலையில் உறக்கத்திலிருந்து எழுந்த பொழுது, சரியான வயிற்று எரிச்சல். என்னால் தாங்க முடியவில்லை. காலையில், தேநீர் கூட அருந்த முடியவில்லை. என் அம்மாவிடம் கேட்டு, வீட்டில் இருந்த வெண்ணை வாங்கி சாப்பிட்டேன். ஒரு மணி நேரமாக காத்திருந்தேன். இருப்பினும், அந்த எரிச்சல் அடங்கவே இல்லை.
என் பெற்றோர், இதற்கு மருத்துவம் பார்க்கும்படி சொன்னார்கள். அதற்கு நான், “அப்படித்தான் ஆகிவிட்டது; பொறுக்க முடியவில்லை” என்று கூறினேன். நாங்கள் மருந்துகள் வாங்கினால், “பாலாஜி” என்ற நபர் நடத்தும் கடையில் இருந்து வாங்குவோம். அந்த நேரத்தில் அவருடைய பெயர் ஞாபகத்திற்கு வந்தது. அப்போது, நான் எரிச்சல் தாங்க முடியாமல்,
“பாலாஜி…, உன்னிடம் மருந்து வாங்கி சாப்பிட்டால், தான் சரியாகும்”, என்று என் வயிற்றில் கை வைத்து; என்னை அறியாமல் கூறினேன்.
என்னவோ!, ஒன்றும் புரியவில்லை. ஓரிரு நிமிடங்களுக்குள், பொறுக்க முடியாத என் வயிற்று எரிச்சல், இருந்த இடம் தெரியாமல் போனது.
இதற்கு காரணம், அந்த வெண்ணெயா? அல்லது வெண்ணெய் திருவனா? என்று அறிய முடியவில்லை. ஆனால், ஒருமனதாக உச்சரித்த பெயர், அந்த தருணத்தில் என் துயர் போக்கியது.
இதனை நினைத்து பார்க்கும் பொழுதுதான், அந்த மகாபாரதம் நிகழ்வும் நம் முன்னோர்கள் குழந்தைகளுக்கு இறைவனின் நாமத்தை சூட்டுவதற்கான புரிதலும், என் அறிவிற்கு எட்டியது. அன்று முழுவதும் அந்த நிகழ்வு, எனக்கு வியப்பாக இருந்தது.
பின்னர், அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று; பரமபத வாசல் கடந்து, அந்த பரந்தாமனை பார்த்தோம் வணங்கினோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக