இந்த வலைதளத்தில் தமிழர்களின் வாழ்க்கை முறைகள், பண்புகள், தெய்விகம், ஜோதிடம் ஆகியவற்றைப் பற்றிய பல்வேறு வகையான பயனுள்ள தகவல்களை அறியலாம் - இணையம் சார்ந்த எளிமையான கருவிகளை பயன்படுத்த அறத்திணை -யை பின்பற்றுக. For more follow ARATHINAI (arathinai.blogspot.com).

அழிக்க நினைப்பவர்களுக்கு அகத்தியர் சொன்ன நீதி

அழிக்க நினைப்பவர்களுக்கு அகத்தியர் சொன்ன நீதி
At செப்டம்பர் 04, 2025

முனிவர்களின் ஆற்றல் மற்றும் தவ வலிமை ஆகியவற்றை அறிந்து, அவர்களை தங்கள் பசிக்கு உணவாக்க விரும்பிய அசுரர்கள், வாதாபி மற்றும் வில்வலன் என இருவரும். இவர்களில் வில்வலன் தந்திரசாலி, வாதாபி பலசாலி. இருவரும் முனிவர்கள், தவ வலிமை பெற்றவர்களை விருந்துக்கு அழைத்து, அவர்களைக் கொன்று, உண்டு, அவர்களின் தவ ஆற்றலை எடுத்துக் கொள்பவர்கள்.



(அசுரர்கள் வாதாபியும் வில்வலனும் தங்கள் குடிலுக்கு அருகே பசியுடன் காத்திருந்தனர்.)

வாதாபி: "சகோதரா! வயிறு காலியாக இருக்கிறது. நாம் உணவு உண்டு பல நாட்கள் ஆகிவிட்டது."

வில்வலன்: "ஆமாம், சகோதரா! எவரும் இந்த வழியில் வராததால், நமது பசிக்கு உணவில்லாமல் போய்விட்டது. இந்த பசி தாங்க முடியவில்லை."

வாதாபி: (வெளியே பார்த்தபடி) "அங்கே பார்! தூரத்தில் யாரோ ஒருவர் வருகிறார். வருவது முனிவர் போல தெரிகிறது."

வில்வலன்: (வியப்புடன்) "அப்படியா! நாம் இருவரும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அவரை விருந்துக்கு அழைத்து, நாம் பசியாரி விடுவோம்."

வில்வலன்: "சுவாமி, இந்த வழியே தாங்கள் வந்தது எங்கள் பாக்கியம்!. இந்த நீண்ட பயணத்தில் நீங்கள் களைத்திருப்பீர்கள். எங்கள் குடிலில் சற்று ஓய்வெடுத்து, உணவு உண்டு செல்லுங்கள்."

(அவர்களைப் பற்றி விசாரித்த பின், அகத்தியர் அவர்களின் அழைப்பை ஏற்று வாழ்த்தினார்)

அகத்தியர்: "உன் எண்ணம்போல் வாழ்வாய்!"

அகத்தியர் உள்ளே வந்தபோது, குடிலின் ஒரு மூலையில் பல முனிவர்களின் உடமைகளும், கமண்டலங்களும் குவிந்திருப்பதைக் கண்டார்.

அகத்தியர்: "இவை அனைத்தும் யாருடையது? இவ்வளவு உடமைகள் இங்கே குவிந்திருப்பதன் காரணம் என்ன?"

வில்வலன் பதறாமல், தன் தந்திரமான புன்னகையை நிலைநிறுத்தினான்.

வில்வலன்: "சுவாமி, இந்த வழியே சென்ற முனிவர்கள் சிலர் இவற்றை உபசரிப்பிற்கு பரிசாக தந்தனர்."

அகத்தியர், வில்வலனின் பொய்யுரையை தனது ஞானத்தால் உணர்ந்து கொண்டார். ஆனாலும், அமைதியாக எதுவும் பேசாமல் வில்வலன் கொடுத்த உணவை சாப்பிட அமர்ந்தார். அந்த உணவில் ஒரு அங்கமாக மாறி வாதாபி ஒளிந்திருந்தான்.

வில்வலன்: "சுவாமி, இந்த உணவை எல்லாம் தாங்கள் உண்ண வேண்டும்."

அகத்தியர்: "நன்று!" என்று சொல்லி, உணவை சாப்பிடத் தொடங்கினார்.

அகத்தியர் உண்டபின், வில்வலன் தனது சகோதரனை அழைக்கத் தயாரானான். ஆனால் அதற்கு முன், அகத்தியர் தன் வயிற்றைத் தடவிக்கொண்டே, தனது தவ வலிமையால் உரத்த குரலில் கூறினார்.

அகத்தியர்: "வாதாபி, நீ இனிமேல் வெளிவரமாட்டாய்! ஜீர்ணம் பவ! (செரித்துவிடு!)"

அதிர்ந்துபோன வில்வலன், மீண்டும் மீண்டும் "வாதாபி, வெளியே வா!" என்று கதறினான். ஆனால் எந்தப் பதிலும் இல்லை.

கோபத்தில் கொதித்த வில்வலன், தன் உண்மையான உருவைக் காட்டி, அகத்தியரைத் தாக்க வந்தான்.

வில்வலன்: "என் சகோதரனை என்ன செய்தாய்?"

அகத்தியர்: "அவன் ஜீரணமாகிவிட்டான்," என்றுக் கூறி, தாக்கமுயன்ற வில்வலனை, தனது தவ வலிமையால் தண்டித்தார்.

(அகத்தியர், வாதாபி மற்றும் வில்வலனை அழித்த பிறகு, அங்கு கூடியிருந்த பிற முனிவர்களும், தவசிகளும் அவரை சூழ்ந்து கொண்டு நன்றி தெரிவித்தனர்.)

முனிவர்கள்: "சுவாமி, தாங்கள் எங்களைக் காப்பாற்றியது மட்டுமல்லாமல், பல காலமாய் எங்களை பயமுறுத்தி வந்த தீய அசுரர்களை அழித்துவிட்டீர்கள். எங்கள் உயிர் காத்தது மட்டுமின்றி, தவத்திற்கும் பாதுகாப்பு கொடுத்தீர்கள். தங்களுக்கு எங்கள் நன்றி."

அகத்தியர்: "முனிவர்களே, நாம் அனைவரும் ஒரே தர்மத்தின் வழியில் இருப்பவர்கள். இங்கு நடந்தது என்னுடைய சக்தியால் மட்டுமல்ல, தர்மத்தின் சக்தியாலும் தான். வாதாபி மற்றும் வில்வலனின் அழிவு, அவர்களது தீய எண்ணங்களாலேயே ஏற்பட்டது."

முனிவர்: "தாங்கள் சொல்வது புரியவில்லை சுவாமி?"

அகத்தியர்: "இது அனைவருக்கும் ஒரு பாடம். “தீய எண்ணம் கொண்டவர்கள், பிறரை அழிக்க நினைக்கும் போது, அவர்கள் தங்கள் எண்ணங்களால் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வது உறுதி”. அதுபோலத்தான், வாதாபியும் வில்வலனும் தங்கள் சூழ்ச்சியால் மற்றவர்களை அழிக்க நினைத்தனர். ஆனால், இறுதியில் தங்கள் சூழ்ச்சியாலேயே அழிந்தனர்."

அகத்தியர்: "நான் செய்தது, அந்த உணவை உண்டது மட்டுமே. எனது எண்ணம், அவர்களை அழிப்பது அல்ல. என் நோக்கம், என்னை தற்காத்துக் கொள்வது மட்டுமே. ஆனால், அவர்களது எண்ணம் பிறரை அழிப்பதாக இருந்தது. எனவே, அவர்களின் தீய எண்ணமே அவர்களை அழித்தது. இந்த நீதி, இன்றும் என்றும் பொருந்தும். எனவே, நல்வழியில் சென்று, நற்சிந்தனைகளுடன் இருங்கள். அதுவே உங்களை எல்லா ஆபத்துகளில் இருந்தும் காக்கும்."

(அகத்தியரின் வார்த்தைகளைக் கேட்டு, அனைவரும் அவரைப் பணிந்து வணங்கினர்.)


இந்த கதையை கேட்டதும், உள்ளார்ந்த பொருள் புரிந்தது. இதன் உண்மைத்தன்மையை அறிவதை விட, அது வெளிப்படுத்தும் நீதி மிகப்பெரியது. அனைவரும் படிக்கும் வகையில், இதை சற்று மாறுபட்ட உரை நடையில் எழுதியிருக்கிறேன்.



Comments: 0

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக