ஆணவம் அல்லது பிடிவாதம் என்பது ஒரு இயல்பாக இருக்கும் குணம். ஆனால், அது எல்லை மீறும்போது, அழிவுக்கு வழிவகுக்கும் ஒரு மோசமான நிலையாக மாறுகிறது. இதற்குப் புராணக் கதைகள் முதல் அண்மைக்கால வரலாறு கதாபாத்திரங்கள் வரை பொருந்தும்.
இராவணன்
இராமாயணத்தில், இராவணன் அசுரர்களின் அரசன். சிவ பக்தியில் சிறந்தவன். இராமன் மீது கொண்ட வெறுப்பும், சீதையை அடைய வேண்டும் என்ற பிடிவாதமும், தன்னைவிட சிறந்தவன் எவரும் இல்லை என்ற அகந்தையும் அவனும் அவனது குடும்பமும் குலமும் அழியக் காரணமாக அமைந்தது.
துரியோதனன்
மகாபாரதத்தில், கௌரவர்களில் மூத்தவர். பாண்டவர்கள் மீது இருந்த வெறுப்பும், இந்த இராச்சியமும் தான் இந்த மண்ணை ஆள வேண்டும் என்ற பிடிவாதமும், யாருக்கும் விட்டுக்கொடுக்காத ஆணவமும் அவரது வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. கிருஷ்ணரின் சமாதான முயற்சிகளை ஏற்காத அவரது பிடிவாதம், மகாபாரதப் போருக்கு வழிவகுத்தது. இறுதியில் அவரது அழிவுக்கு வித்திட்டது. இதன் விளைவாகத் துணையாக இருந்த கௌரவர்கள் அழிந்தனர்.
இரணியகசிபு
இரணியகசிபு ஒரு அசுர அரசன். கடுமையான தவம் செய்து பிரம்மாவிடம் வரங்கள் பெற்றவர். ஆனால், அந்த வரங்களால் தான் அழியாதவன் என்ற ஆணவம் கொண்டார். 'நானே கடவுள்' என்ற பிடிவாதத்தால், தன் மகன் பிரகலாதன் விஷ்ணுவை வணங்குவதை எதிர்த்தார். இதுவே நரசிம்ம அவதாரத்தின் மூலம் அவரது அழிவுக்கு வழிவகுத்தது. தான் மட்டுமே உயர்ந்தவன் என்ற அவனது அகந்தையால்தான் நரசிம்ம அவதாரத்தால் கொல்லப்பட்டான்.
வாலி
இராமாயணத்தில், கிஷ்கிந்தையின் வலிமைமிக்க மன்னனான வாலி, தன்னுடன் நேருக்கு நேர் போர் புரிபவர்களின் சக்தியின் ஒரு பகுதியைப் பெற்று அவர்களை பலவீனப்படுத்த முடியும் என்ற வரம் காரணமாகப் பெரும் ஆணவம் கொண்டிருந்தான். இந்த ஆணவமே அவனது வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. சுக்ரீவனுக்கு உதவ வந்த இராமபிரான், தர்மத்தை நிலைநாட்ட, மறைந்திருந்து அம்பு எய்து வாலியைக் கொன்றார்.
மகாபலி சக்கரவர்த்தி
மகாபலி ஒரு அசுர அரசன். இவர் பக்த பிரகலாதனின் பேரன். தர்மம் செய்வதிலும், தானம் அளிப்பதிலும் சிறந்து விளங்கினார். ஆனால், தனது செல்வம் மிகுதியால் ஆணவம் கொண்டார். இந்த ஆணவத்தால், யாசகம் கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்ல மாட்டேன் என்ற பிடிவாதமும் அவரிடம் இருந்தது. மகாபலியின் இந்த ஆணவத்தை அடக்க, விஷ்ணு வாமன அவதாரம் எடுத்துச் சிறுவனாக வந்தார். அவரிடம் மூன்று அடி நிலம் மட்டும் கேட்டார். தன்னுடைய குருவான சுக்ராச்சாரியரின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல், மகாபலி அந்த மூன்று அடி நிலத்தை தானம் செய்ய சம்மதித்தார். உடனே வாமனர் பிரம்மாண்டமாக வளர்ந்து, தனது முதல் அடியால் பூமியையும், இரண்டாவது அடியால் வானத்தையும் அளந்தார். மூன்றாவது அடிக்கு இடம் இல்லாததால், தனது தலையில் மூன்றாவது அடியை வைக்குமாறு மகாபலி வேண்டிக் கொண்டார். இதனால் வாமனரால் பாதாள லோகத்துக்குத் தள்ளப்பட்டார். இதுவே அவரது ஆணவம் மற்றும் பிடிவாதத்தால் அவருக்கு ஏற்பட்ட வீழ்ச்சி.
•○•○•○•○•○•○•○•○•○•○•○•○•○•○•○•○•○•
இந்தக் கதைகள் யாவும், ஒருவரது சக்தி, செல்வம் அல்லது தகுதியின் மீது ஏற்படும் ஆணவம், இறுதியில் வீழ்ச்சிக்குக் காரணமாக அமையும் என்பதைப் பல எடுத்துக்காட்டுகளின் மூலம் விளக்குகின்றன. இதையே நீக்கப்பட வேண்டிய மலத்திற்கு ஒப்பான குணங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.
இதற்குச் சான்றாக, அண்மைக் கால வரலாற்றில் மாவீரன் நெப்போலியன் முதல் ஹிட்லர் வரை வீழ்ந்த கதைகளை இந்த உலகம் அறியும். இன்னும் கூறப்படாத எத்தனையோ வரலாற்றுப் பாத்திரங்கள் உள்ளனர். உங்கள் அனுபவத்தில் தெரிந்த நபர்கள் கூட இருக்கலாம். இது இன்றைய அரச பதிவியில் உள்ளவர்கள் முதல் அன்றாட வாழ்க்கை வாழும் பாமர மக்கள் வரை அனைவருக்கும் பொருந்தும்.
இந்த ஆணவம் என்பது உடனே தோன்றுவதில்லை. ஒவ்வொரு சூழ்நிலையும் அதற்கு காரணமாவர்களும் இதற்கு வித்திடுகிறது. அதாவது, ஒருவரது ஏக்கம் பொறாமையாக மாறக்கூடும். அந்தப் பொறாமையே பிடிவாதமாக மாறக்கூடும். அந்தப் பிடிவாதமே நாளடைவில் ஆணவமாக மாறக்கூடும்.
இதை ஆரம்பத்திலேயே கண்டுகொள்ள வேண்டும் என்பதற்காகவே இத்தனை கதைகள் உள்ளன. இதை குழந்தைப்பருவத்திலிருந்தே அறியாமல் இருந்துவிட்டால், இந்தத் தவறுக்காக வருத்தப்பட வேண்டியிருக்கும்.
எனவே, ஆணவம் தவிர்போம், அறிவை வளர்ப்போம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக