இந்த வலைதளத்தில் தமிழர்களின் வாழ்க்கை முறைகள், பண்புகள், தெய்விகம், ஜோதிடம் ஆகியவற்றைப் பற்றிய பல்வேறு வகையான பயனுள்ள தகவல்களை அறியலாம் - இணையம் சார்ந்த எளிமையான கருவிகளை பயன்படுத்த அறத்திணை -யை பின்பற்றுக. For more follow ARATHINAI (arathinai.blogspot.com).

இராவணன் தமிழனா?

இராவணன் தமிழனா?
At செப்டம்பர் 27, 2025

இந்த கேள்விக்கான புரிதலை ஏற்படுத்தும் விதமான ஓராய்வுக் கட்டூரை.

ராவணன் ஒரு தமிழன் என்று கூறி, அவன் செய்த செயல்களுக்கு ஆதரவும் போற்றுதலும் செய்கிறார்கள். உண்மையில் ராவணன் தமிழனா? 

வால்மீகி இயற்றிய இராமாயணத்தில் ராவணன் என்ற கதாபாத்திரம் உள்ளது. இதை மூலமாகக் கொண்டு தமிழில், கம்பர் இயற்றிய கம்பராமாயணம் உள்ளது.

இராமகதையில் வரும் ராவணன் கதாபாத்திரம் உண்மையா? அல்லது கற்பனையா? என்று ஆராய்வதை விட, அதன் குறிப்புகளை வைத்து ராவணன்  பற்றி அறிந்து கொள்ளலாம்.

இராமாயணத்தில் வரும் ராவணன் இலங்கையை ஆண்ட ஓர் அசுர அரசன். பத்து தலைகள் கொண்டவனாகவும், சிவ பக்தனாகவும், வேதங்கள் மற்றும் கலைகளில் சிறந்த அறிவாளியாகவும் இருந்தார். பல தீய குணங்கள் இருந்தபோதிலும், ராவணன் ஒரு மாபெரும் வீரன் மற்றும் அறிவாளியாகச் சித்தரிக்கப்படுகிறார். பத்து தலை என்பது “பத்து விதமான கலைகளில் சிறந்தவன்”, என்று உவமையாக அறியப்படுவதாக மொழி ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

 

வால்மீகி இராமாயணத்தில் ராவணன் பெயர்கள்:

இருப்பினும், அவரது குணங்கள், தோற்றம் மற்றும் வரங்களைப் பொறுத்து இராமாயணத்தில் பல பட்டப் பெயர்கள் மற்றும் அடைமொழிகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க சில:

  1. ராவணா (Raavaṇa): இதுவே பிரதானப் பெயர். 'ராவணா' என்றால் "பெரிய கூச்சலை ஏற்படுத்துபவன்" அல்லது "அலறச் செய்பவன்" என்று பொருள்படும். 

  2. தசக்கிரீவா (Dasagriva): இது வால்மீகியின் இராமாயணத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படும் மற்றொரு பெயர். 'தச' (Dasa) என்றால் பத்து மற்றும் 'கிரீவா' (griva) என்றால் தலை என்று பொருள். இவருக்கு பத்து தலைகள் இருந்ததால் இப்பெயர் வந்தது.

  3. லங்கேஸ்வரா (Lankesvara): இவன் இலங்கையின் (Lanka) தலைவன் (Isvara) என்பதால் இப்பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

  4. ராட்சதாதிபதி (Raksasadhipati): இராட்சதர்களின் (Raksasa) தலைவன் (Adhipati) என்பதால் இப்பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, வால்மீகி இராமாயணத்தில் அவரைப் பற்றிப் பேசும்போது, ராவணா மற்றும் தசக்கிரீவா ஆகிய இரண்டு பெயர்களும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

வால்மீகி இராமாயணத்தில் உள்ள பெயர்களைப் போலவே, கம்பரும் பயன்படுத்திய சில முக்கிய பெயர்கள்:

இராவணன், தசமுகன், இலங்கை வேந்தன், அரக்கர் கோமான் என்றெல்லாம் குறிப்பிடும் விதமாக உள்ளது.

இந்த இலக்கிய குறிப்புகளில் இருந்து, ராவணன் ஒரு அசுரன் என்று விவரிக்கிறது. அந்த கதாபாத்திரத்தின் செயல்களும் அசுர தன்மையில் உள்ளது.

அவ்வாறு இருக்கையில் ராவணன் எவ்வாறு தமிழனாக இருக்க முடியும்? குறிப்பாக, ஒரு அசுரன் எவ்வாறு தமிழனாக இருக்க முடியும். இதற்கு மாற்றாக எடுத்துக்கொண்டால், தமிழ் கற்றறிந்த வேந்தனாக இருக்கலாம். 

அப்படியே, அதை மறுத்தாலும், இதற்காக தர்க்கம் செய்யும் விதமாக பின்வரும் கூற்றுகள் அமையும்:

தமிழுக்கு இலக்கணம் வடித்த அகத்தியர் யார்?

தமிழுக்கு இலக்கண நூல் இயற்றிய தொல்காப்பியர் யார்?

தமிழுக்குச் சங்கம் வைத்து, இலக்கியங்கள் படைத்த புலவர்கள் அத்துணைப் பேரும் யார்?

வழிவழியாகத் தமிழ் பேசி வரும் நாம் அனைவரும் யார்? 

இருப்பினும் ஏற்க மறுத்தாலும், ராவணன் தமிழன் என்று கருதினால், அவரைப் பெற்றெடுத்தவர்கள் தமிழராகத் தானே இருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால், ராவணனுக்குத் தமிழ் இலக்கணப்படி பெயர் வைத்திருக்க வேண்டும் அல்லவா?

இதில் என்ன இலக்கணப் பிழை என்றால், தமிழ் மொழியில் மொழிக்கு முன் அதாவது, சொல்லுக்கு முதலில் வரக்கூடாத எழுத்துகளாகச் சில உள்ளது. அவை, 

  • மொழிக்கு முதலில் வராத மெய் எழுத்துகள்: 

ட், ண், ற், ல், ள், ழ், ர், ன்

  • பிற எழுத்துகள்:

ஆய்த எழுத்து (ஃ) எந்தச் சொல்லின் முதலிலும் வராது. 

  • உயிர்மெய் எழுத்துகள்: 

மேற்கூறிய மெய்யெழுத்துகளோடு வரும் உயிர்மெய் எழுத்துக்களும் மொழிக்கு முதலில் வராது.


அப்படியென்றால், ‘ரா’ என்ற எழுத்தில் எவ்வாறு பெயர் அமைந்திருக்கும். அதாவது, “ராவணா” என்ற பெயரை, தமிழ் இலக்கண முறைப்படி, “இ” என்ற முன்னொட்டுடனும் ஆண்பால் விகுதியான "அன்" விகுதியுடனும் சேர்த்து “இராவணன்” என்று அழைக்கப்படுகிறது. எனவே, ராவணா என்பது தமிழ் சொல் அன்று.

இதற்கு பெயரியல் தொடர்பாக ஆய்வில், தமிழ்ச் சங்ககாலப் புலவர்களின் பெயர்களின் தொகுப்பில் பார்க்கும் பொழுது, புலவர்களுக்குத் தமிழ் இலக்கண முறைப்படியான பெயர்களே உள்ளது. அதாவது, மொழிக்கு முதலில் வரக்கூடாத எழத்துக்கள் இன்றியே பெயர்கள் உள்ளது.

இதையும் மறுப்பின், ‘ரா’ என்ற எழுத்தில் பெயர் அமைந்திருக்கும், இராமரும் தமிழராகத் தானே எடுத்துக்கொள்ள வேண்டும். 

எந்தவொரு தமிழ் மன்னனும், நீதிநெறி தவறாது, ஈவு இரக்கத்துடன், உயிர் நேயத்துடன் திகழ்ந்துள்ளனர். இதற்கு கடையெழு வள்ளல்களே சாட்சி. வாடுகின்ற முல்லைச் செடிக்குத் தன் தேரினைக் கொடுத்தான் பாரி. 


தமிழ் மன்னர்கள் பெண்களிடம் கண்ணியத்துடன் நடந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள்:

  1. பெண்களின் அறிவுக்கு மரியாதை (ஔவையார்): இவர் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மற்றும் சிற்றரசர்களான அதியமான், பாரி ஆகியோரிடமும் சமமாகப் பழகியவர். அவர் மூவேந்தர் அவைகளிலும் பெற்ற மரியாதை, அறிவுக்கே தரப்பட்ட கண்ணியத்தின் சான்றாகும்.

  2. பெண்களின் கற்புக்கும் நீதிக்கும் முக்கியத்துவம் (சிலப்பதிகாரம்): மன்னன் பாண்டியன் நெடுஞ்செழியனிடம், தன் கணவன் கள்வன் அல்ல என நிரூபிப்பதற்காகக் கோவலனின் மனைவி கண்ணகி நியாயம் கேட்க வந்தபோது, முதலில் அவளின் துயரைக் கேட்டறிந்தார். தன் தீர்ப்பில் தவறு நேர்ந்ததை உணர்ந்த மன்னன், "அறம் தவறிய என் ஆட்சியில் நான் உயிர்வாழ்வது தவறு" எனக் கூறி, அரியணையில் இருந்து விழுந்து உயிர்துறந்தார். இது ஒரு பெண்ணின் நீதிக்கு ஒரு மன்னன் கொடுத்த மிக உயர்ந்த மரியாதையாகும்.

  3. அரச முடிவுகளில் பெண்களின் பங்கு: சோழர் காலத்தில், அரசிமார்களும் அரச குடும்பப் பெண்களும் ஆலயங்கள் கட்டுவதிலும், நிர்வாகத்தில் நேரடியாகப் பங்கேற்றுள்ளனர். கல்வெட்டுகளில் அவர்களது கொடைகள் மற்றும் நிர்வாக முடிவுகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.

  4. எதிரிகளின் மனைவியரை மதித்தல்: ஒரு மன்னன் மற்ற மன்னனைப் போரில் வென்றால்கூட, அவர்களின் அரண்மனைப் பெண்களை மரியாதை குறைவாக நடத்தவில்லை. புறநானூற்றுப் பாடல்கள், போரின் போது பெண்களையும், அவர்களின் கற்பையும் பாதுகாப்பது மன்னனின் கடமைகளுள் ஒன்றாகக் கருதப்பட்டது எனக் கூறுகின்றன.

  5. வீரப்பெண்கள் மீதான மரியாதை: தன் மகனையும் தன் கணவனையும் நாட்டுக்காக அர்ப்பணித்த காவற்பெண்டு போன்ற வீரத் தாய்மார்களைப் புலவர்கள் போற்றிப் பாடியுள்ளனர். மன்னர்களும் இவர்களுக்கு மரியாதை அளித்துள்ளனர். இது பெண்கள் வீரத்தின் சின்னமாகவும், மரியைக்குரியவர்களாகவும் பார்க்கப்பட்டதைக் குறிக்கிறது.

இவ்வாறாகத் தமிழ் மன்னர்கள் உயரிய மாண்புகள் உடன் திகழ்ந்துள்ளனர். அவ்வாறு இருக்கையில் இராவணன் எவ்வாறு தமிழனாக, அதும் தமிழ் மன்னாக இருக்க முடியும். கலைகளிலும் பக்தியிலும் சிறந்து விளங்கினால் போதுமா? நீதியுடனும் கண்ணியத்துடனும் இருப்பதே அரச குணமாகும். மற்றதெல்லாம் அசுர குணமாகும்.

இராவணன் ஒரு தமிழன் என்றுக் கருதி, அவன் செய்த செயல்களை ஏற்றுக்கொள்வதும் நியாயப்படுத்துவதும் மிகப்பெரும் தவறு. ஆனால், அவனது பக்தியையும் கலை ஞானத்தையும் போற்றத்தக்கவை. இந்தக் கதாபாத்திரம் உண்மையாக இருந்தாலும், ஒருவன் இவ்வாறான குற்றங்கள் செய்யக்கூடாது, இல்லையேல் தண்டிக்கப்படுவான், என எடுத்துரைக்கும் விதமாக இராமகதை உள்ளது. 


இது வெரும் தனிப்பட்ட ஒரு சிறிய ஆய்வுக்கருத்தே, தவிர எவ்விதப் புகுத்தலுக்கும் முற்படவில்லை.


எது எப்படியோ, யாது உண்மை என்று யார் அறிவார்?...


“தமிழன் என்றோர் இனமுண்டு

தனியே அவற்கொரு குணமுண்டு”, என்ற பாடலின் மூலம் நாமக்கல் கவிஞர் தெரிவிக்கிறார். இதிலிருந்து தெரிகிறதல்லவா, தமிழருக்கு தனிச்சிறப்பான குணம் உண்டு. இதனை அசுர குணத்தோடு ஒப்பிடலாமா?


இறுதியாக உறுதியாக, ஒரு அசுரன் தமிழனாக இருக்க முடியாது, என்பது என் ஆய்வுக்கருத்து. தமிழ் இனம் என்பது உயர்ந்த, முன்னோடியான, முற்போக்கான இனம், என்பதை நாம் அறிய வேண்டும்.


தங்களது கருத்துக்களை பதிவிடுங்கள்… பட்டி தொட்டி எல்லாம் பரப்பி விடுங்கள்…



Comments: 0

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக