இந்த வலைதளத்தில் தமிழர்களின் வாழ்க்கை முறைகள், பண்புகள், தெய்விகம், ஜோதிடம் ஆகியவற்றைப் பற்றிய பல்வேறு வகையான பயனுள்ள தகவல்களை அறியலாம் - இணையம் சார்ந்த எளிமையான கருவிகளை பயன்படுத்த அறத்திணை -யை பின்பற்றுக. For more follow ARATHINAI (arathinai.blogspot.com).

பிச்சை எடுப்பவர்கள் அன்றும் இன்றும்

பிச்சை எடுப்பவர்கள் அன்றும் இன்றும்
At அக்டோபர் 14, 2025
ஈயென இரத்தல் இழிந்தன்று அதன்எதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;

அவ்வாறு, ஒருவரிடம் முன்னின்று இரத்தல் அதாவது, வேண்டுவது அல்லது யாசகம் பெற இருப்பது இழிவானது என்று, புறநானூறு 204-வது பாடலின் மூலம் அறியலாம். காலப்போக்கில் இந்நிலை மாறிவிட்டது. இதைக் குற்றம் சொல்ல முடியாது. 

ஒருவர் யாசகம் பெறுகிறார் என்றால், அந்நிலைக்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், அவர்களுக்குத் தரமறுப்பதும் இழிவானது என்று பாடல் எடுத்துரைக்கிறது.

இந்தியத் திருநாட்டில், 20-ஆம் நூற்றாண்டில், நகரங்களின் எண்ணிக்கை குறைவு. பெரும்பாலும், நாம் அறிந்த வகையில், யாசகம் பெறுவோர் ஊருக்கு ஒருவர் அல்லது கிராமத்தில் ஒருசிலர் என்ற அளவில் இருந்தனர்.

அவர்களும் தங்களுக்குத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றை பொருளாக யாசகமாகப் பெற்றார்களே தவிர, பணமாக அல்ல.

யாசகர்கள் அன்றைய நாள் உணவிற்காக, வீடு வீடாகச் சென்று, சோறு மற்றும் குழம்பு அல்லது அதற்குத் தேவையான அரிசி மற்றும் பருப்பு போன்றவற்றை யாசகமாகப் பெற்றார்கள்.

யாசகர்களும் வழிப்போக்கர்களும் தங்கிச் செல்ல, அவரவர் வீட்டிற்கு முன்பு திண்ணையும் பெரிய வாசலும் வைத்திருந்தார்கள்.

யாசகர்கள் பெரும்பாலும், ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஏதேனும் இடத்தில் தங்கி, தங்கள் இருப்பிடத் தேவையைப் பூர்த்தி செய்தார்கள். அவர்கள் அங்கேயே சமைத்துச் சாப்பிட்டு, அந்தப் பகுதிக்குத் பாதுகாப்பாக இருப்பார்கள்.

இப்படியாக, யாசகர்களுக்கு ஒருவகையில் இது பணியாகத் திகழ்ந்தது.

பணம் மற்றும் பொருளாதாரமயமாக்கல் மற்றும் நகரமயமாக்கல் விளைவாக யாசகம் பெறுவோர் நிலையில் மாற்றம் கண்டுள்ளது. ஏனென்றால், பெரும்பாலான பொது இடங்களில் யாசகர்கள் இருப்பதைக் காண முடிகிறது.

உணவு பெற முடியாத சூழல் உள்ளதால், அதற்கேற்பப் பணமாக, காசாகப் பெறுவதை யாசகமாக மாற்றிக்கொண்டனர். காரணம், பணி நிமித்தமாக ஒவ்வொருவரும் வழிப்போக்கர்களாக மாறிவிட்டோம். அவர்களும் உணவிற்காகக் காசு பணத்தைப் பெறவும், நாம் அதைக் கொடுத்து உதவவும் பழகிவிட்டோம்.

இவர்களின் நிலை என்றும் மாறாதா? அல்லது தொழில்முறையாக யாசகம் பெறுவோர் அதிகரித்துவிட்டனரா?

காரணம், யாசகம் பெற்றுப் பணக்காரர் ஆனவர்கள் பற்றிய செய்திகள் மற்றும் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கச் செய்வது பற்றிய செய்திகள்.

இதற்குத் தீர்வுதான் என்ன?

அப்படியாக, தங்களுக்குத் தெரிந்த சிறந்த தீர்வுகளைப் பதிவிடுங்கள்.

20-ஆம் நூற்றாண்டுக்கு முன்பெல்லாம், வழிப்போக்கர்கள் வந்து செல்வார்கள். அக்காலத்தில் யாசகர்கள் இருந்தார்களா? என்று ஐயம் எழுகிறது. அந்த வழிப்போக்கர்கள் வந்து தங்கிச் செல்ல, சத்திரம் மற்றும் சாவடி என்று கட்டினார்கள். அவர்களின் பயணத்திலே, சுமையை இறக்கி வைத்து இளைப்பாற, பாதை எங்கும் சுமைதாங்கிக் கல்லை வைத்தார்கள். வழிநெடுகிலும் மரங்கள், செடிகள் மற்றும் கொடிகள் என இருந்தன. அதிலிருந்து பழக்கனிகளைப் பறித்து உண்டனர். ஊர்த் திருவிழாக்களில் ஊருக்கே விருந்து படைத்து, அனைவரது பசியை ஆற்றச் செய்தனர். தாகத்திற்கு ஆற்றங்கரை, குளக்கரை, ஏரிக்கரை மற்றும் ஊர்க் கிணறுகளில் நீரெடுத்துப் பருகினார்கள். அன்றைய மக்கள் தங்கள் வீடுகளில் திண்ணை வைத்துக் கட்டினார்கள். காரணம், தங்களுக்கும் பயன்படும், இது போன்ற வழிப்போக்கர்கள் தங்கிச் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான்.

ஆனால், நகரங்களில் மழையிலும் வெயிலிலும் ஒன்றுவதற்குக்கூட ஒருசில நிழற்குடைகள் தவிர இடமே இல்லை. தாகத்திற்குத் தண்ணீரைக் கூட விலை கொடுத்து வாங்க வேண்டும். அடிப்படை வேலையைக்கூட ஒருசிலத் தகுதியின்றி வழங்குவதில்லை. இருப்பினும், இது போன்ற சூழல் நகரத்தில் ஒரு சிலரை யாசகர்களாக மாற்றி உள்ளது. ஆனால், பெரும்பாலும் கிராமங்களில் யாசகம் கேட்டு யாரும் வருவதில்லை. காரணம், மக்கள் தொகை குறைவு, உதவிக்குப் பதில் காசு மற்றும் பணமாகக் கிடைக்காத நிலை.

ஒரு சில ஆதரவற்ற முதியவர்கள், ஒரு சில மாற்றுத்திறனாளிகள், ஒரு சில இளம் வயதினர் மற்றும் ஒரு சில குழந்தைகள். குறிப்பாக, தங்கள் திறமையால் மாற்றுத்திறனாளிகள் பெறுவது யாசகம் அல்ல. அது அவர்களின் உழைப்பு. மாறாக, ஒரு சிலர் மாற்றுத்திறனாளிகள் இருக்கக்கூடும். இது யாசகம் பெறுவோர் அடிப்படையில் மாறுபடும். இவர்கள் யாவரும் விருப்பப்பட்டு யாசகம் பெறுவதில்லை. மாறாக, இதிலிருந்து மாற முடியாத காரணத்தால் யாசகம் பெறுகிறார்கள். இன்றும் நகரத்தில் ஒருவேளை உணவை இலவசமாகப் பெற முடியுமா? அவர்களின் பசியைப் போக்க வேறு வழியில்லை என்பதால், யாசகர்களாக உள்ளனர். முழுமையாக மின்னணுப் பணப் பரிமாற்றம் இருந்தால், இவர்களின் நிலை என்னவாகும்?

இவர்களின் நிலையை மாற்றத் தீர்வுதான் என்ன? என்றால் அது ஒரு நாளில் மாறிவிடாது. ஒருவரால் மாறிவிடாது. நம் அனைவரின் ஒத்துழைப்பால் சாத்தியமாகும்.

அவர்கள் யாசகம் கேட்டால், அவர்களுக்குப் பணமாக இல்லாமல், ஒருவேளை உணவாக வழங்குங்கள். அல்லது அவர்கள் உழைத்து முன்னேற வழி செய்து கொடுங்கள். அல்லது அவர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினால்,

இதற்காக, அரசும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்களும் செயல்படுகின்றன. இவர்களுக்கு உதவுவதற்காக அரசுத் திட்டங்களும் நல வாரியங்களும் உள்ளன. இவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு, உதவி உபகரணங்கள், கல்வி மற்றும் திறன் பயிற்சி, உதவித்தொகை மற்றும் சமுதாயத்தில் கண்ணியத்துடன் வாழ்வதற்கான வேலைவாய்ப்பு மற்றும் தொழில் தொடங்குவதற்கு உதவிகள் வழங்கப்படுகின்றன.

ஆதரவற்ற பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களைத் தத்தம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட காப்பகங்களில் சேர்க்க உதவுங்கள்.

இதுவே, அவர்கள் யாசகம் கேட்பதற்கு பதிலாக, நீங்கள் தரும் கண்ணியமான உதவியாகத் தீர்வாக இருக்கும். 


Comments: 0

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக