அந்த ஈசேவை மையத்தின் குறுகலான நிழலில் மனிதர்கள் வரிசையாக நின்றிருந்தார்கள். வெயிலின் உக்கிரம் மெல்ல ஏறிக்கொண்டிருக்க, காகிதங்களின் சலசலப்பும், கணினியின் விசைப்பலகை ஒலியும் காதுகளைத் துளைத்தன. சமூக ஊடகங்களில் 'அரசு வழங்கும் இலவசங்கள் தேவையா, இல்லையா?' என்ற விவாதங்கள் எப்போதும் அனல் பறப்பதைப் படித்துக்கொண்டே, நான் அந்த நீண்ட வரிசையில் என் முறைக்காகக் காத்திருந்தேன்.
ஆனால், அன்று என் அருகில் நின்றிருந்த அந்த முதியவரின் வார்த்தைகள், என் சிந்தனையின் திசையையே மாற்றியமைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
ரேஷன் கார்டில் ஏதோ ஒரு திருத்தம் செய்வதற்காகத் தன் தளர்ந்த கைகளுடன் நின்றிருந்தார் அவர். அவரிடம் மெல்லப் பேச்சு கொடுத்தேன். அவர் தன் வாழ்க்கை சூழலை மெல்ல விவரிக்கத் தொடங்கினார்.
"மகனுக்குக் கல்யாணமாகி எங்களை விட்டுப் பிரிஞ்சு போயிட்டான் தம்பி. என் மகளையோ அவ புருஷன் கைவிட்டுட்டான். இப்போ அவ ஆதரவற்ற நிலையில இருக்கா. பிழைப்புக்காகத்தான் சொந்த ஊரை விட்டுட்டு இந்த வயசுல இங்க வந்திருக்கோம்," என்று அவர் சொல்லச் சொல்ல என் இதயம் கணக்கத் தொடங்கியது.
இந்த வயதான காலத்தில் இப்படியுமா? சிலருக்கு வாழ்க்கையில் துன்பம் இருக்க வேண்டும், என்று வருத்தத்துடன் நினைத்துக் கொண்டிருந்தேன்.
அவர் தன் கண்களில் கசிந்த கண்ணீரைத் துடைத்தவாறு சொன்ன அந்த ஒரு விஷயம், ஏனோ என் மனதில் ஒரு பலமான தாக்கத்தை தந்தது.
"இந்த அரசாங்கம் தர்ற உரிமைத் தொகைதான் தம்பி எங்க ரெண்டு பேரோட வயித்துக்கும் சோறு போடுது. அது மட்டும் இல்லன்னா நாங்க என்ன பண்ணுவோம்னே தெரியாது தம்பி..." என்றார் மிக எதார்த்தமாக.
இலவசங்கள் என்றாலே அனாவசியம், அது அரசுக்கு வீண் செலவு, மக்களின் சோம்பேறித்தனத்தை வளர்க்கிறது என்று குளிர்சாதன அறைகளில் அமர்ந்து விவாதிப்பவர்கள் ஒரு நிமிடம் இந்த மனிதர்களைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். வசதி படைத்தவர்களுக்குச் சில நூறு ரூபாய்கள் என்பது ஒரு வேளை உணவின் விலையாகவோ அல்லது ஒரு சாதாரணச் செலவாகவோ இருக்கலாம். ஆனால், இந்த வறியவர்களுக்கோ அதுதான் அவர்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரம், அவர்களின் உயிர் மூச்சு.
இலவசங்களே கூடாது என்று சொல்பவர்கள், அரசு வழங்கும் இலவச கட்டாயக் கல்வி, இலவச மருத்துவம் மற்றும் சாலை வசதிகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை வேண்டாம் என்று ஒதுக்கி விடுவார்களா? அரசாங்கம் என்பது வெறும் வரி வசூலிக்கும் இயந்திரம் அல்ல; அது எளிய மக்களின் வரியை அவசியமானவர்களுக்குச் சரியாகப் பகிர்ந்தளிக்கும் உதவிக்கரம். நாம் செலுத்தும் வரிப்பணம், சமூகத்தின் அடித்தட்டில் இருக்கும் மனிதர்களுக்குச் சரியான நேரத்தில் போய் சேருவதுதான் ஒரு சிறந்த நிர்வாகத்தின் அடையாளம்.
அன்று அந்த முதியவரின் முகத்தில் தெரிந்த ஒரு சிறிய நிம்மதி, எனக்கு ஒரு பெரும் உண்மையை உணர்த்தியது. திட்டங்கள் வெறும் காகித வடிவம் அல்ல; அவை பல ஏழை மனிதர்களின் கண்ணீரைத் துடைக்கும் நிஜக் கதைகள்!
(ஆதாரம்:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக